இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

நான் பயணக் கட்டுரைகள் படித்தது குறைவு. அக்குறுகிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டது, பெரும்பாலான பயண கட்டுரைகள் அப்பயணத்தின் ஊடேயிருந்த இடங்களை அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களுடன் நம்மை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தி அனுபவிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தாவி வேறு ஒரு இடத்தை பற்றிப் பேசி செல்பவையாக இருக்கும். அது ஒரு விதத்தில் தகவல்களை அள்ளி தருபவையாக இருந்தாலும், பயணத்தின் தொடர் அனுபவத்தைத் தவறவிடுகிறது. படிப்பவர்களைப் பயணத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகிறது. எந்த விதத்திலும் அது படிப்பவர்களையும் அப்பயணத்தை மேற்கொள்ளத் தூண்டி விடக்கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கான சரியான காரணம் தெரிவில்லையென்றாலும், அப்பயணக் கட்டுரைகளை எழுதுவதற்காகவே அப்பயணங்கள் செய்யப்படுவதாக இருப்பதால் பயணங்களின் அனுபவத்தைக் கடத்த தவறவிட்டு வெறும் தகவல் களஞ்சியமாக மாறிவிடுகிறது என்று எண்ணுகிறேன். மனம் திளைக்கப் பயணத்தை அனுபவித்துவிட்டு அதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வரும்போது எழுதப்படுபவை அந்த அனுபவத்தையும் அவர்கள் அறியாமலேயே எழுத்தில் கடத்திவிடுகிறார்கள். ஜெவின் "அருகர்களின் பாதை" அப்படி ஒரு அனுபவத்தை என்னு...