Posts

Showing posts from December, 2022
  இலைகளை வெறுக்கும் மரங்கள் ------------------------------- நேற்று இரவு முழுவதும் அடித்த காற்றில் எதிர்வீட்டிலிருந்த மார்ஷாவின் தோட்டத்தில் வைத்திருந்த காற்றாடி அங்குமிங்கும் திரும்பிச் சுழலும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. காலையில் விழித்தபொழுது சுழற்றி அடிக்கும் மிகப் பெரிய காற்றாடி ஒன்றின் பிடியிலிருந்து மீண்டுவந்த கனவின் உணர்வுமட்டுமிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்று பார்க்க நினைத்தாலும், போர்வையின் கதகதப்பிலிருந்து வெளிவர மனமில்லாமல் அப்படியே கிடந்தேன். ஆனால், எண்ணங்கள் அனைத்தும் வெளியே உலாவிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே சென்று பார்த்தேன். சற்று குளிராக இருந்தது. வரிசையாக நின்றுகொண்டிருந்த மரங்களிலிருந்து தொடர்ச்சியாக இலைகள் விழும் இயக்கத்தைத் தவிர அனைத்தும் அக்குளிரில் உறைந்திருந்தன. சாலையெங்கும் நிரம்பியிருந்த சிவந்த இலைகள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு துண்டுகளென எங்கும் பரவியிருந்தன. சிறிது நேரம் அக்குளிரிலேயே நின்றிருந்தேன். இலையுதிர் காலம் தொடங்கியவுடன் மனதுக்குள் மெல்ல ஒரு சோகமும் வந்துவிடுகிறது. ஏனோ அதற்கு எந்த வித காரணமும் இருப்பதுமில்லை.