Posts

Showing posts from August, 2021

இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே

  மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அலறல் செய்திகளின் இடையே, தன் ஒரே மகள் இறந்த துக்கம் தாளாமல் அப்பெண்ணின் பெற்றோர்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தியைப் படித்தேன். வெறும் சொற்களால் மட்டும் கட்டமைக்கப்படாமல் அச்செய்தியுடன் இணைத்திருந்த அந்த புகைப்படத்தில், அப்பெண் இருபக்கமும் நின்றிருந்த தன் பெற்றோர்களின் தோளில் கை போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அச்செய்தியை முன் தள்ளி நகர்ந்திருந்தாலும், ஏனோ என் மனம் மட்டும் அங்கேயே நின்றிருந்தது. புகைப்படத்தில் அப்பெண்ணின் கண்களிலிருந்த துள்ளலான சிரிப்பும், அப்பெற்றோர்களின் பெருமிதமான தோரணையும் நினைவிலிருந்து மீள் செய்யும் தோறும் என் அலுவல் இயக்கங்கள் முழுவதும் இழுபட்டுக்கொண்டே இருந்தது. அப்புகைப்படம் அவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தை உறையச்செய்திருந்தது. அதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் அப்புகைப்படம் முக்கியமான ஒரு மைல்கல்லாக, எத்தனையோ நினைவுகளை அது தாங்கி நின்றிருக்கும். அப்பெண் இல்லா அவள் வீட்டில் அவளின் நினைவுகள் எங்கும் சிதறடிக்கப்பட்டு, சிறு பொருள்கள் கூட அவள் இல்லா இருப்பை உருப்பெருக்கி காட்டியிருக்க