பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி அவர்கள் ரஷ்ய மொழியில் எழுதிய The Insulted and Humilated நாவலைத் தமிழில் எம்.ஏ.சுசீலா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். இந்த நாவலைச் சமீபத்தில் படித்து முடித்தேன். அதனைப் பற்றிய என் ரசனையுரை.
கதையின் சுருக்கம்.
19 ம் நூற்றாண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இவான் பெத்ரோவிச் (வான்யா) என்ற ஒரு எழுத்தாளன் கடந்த வருடத்தில் அவனைப் பாதித்த நிகழ்வுகளை எழுதிக்கொண்டே, கதைசொல்லியாகவும் இருக்கிறான்.
பாகம் 1
வான்யா தன்னை வளர்த்த நிகோலாய் மற்றும் ஆனா அவர்களின் மகள் நடாஷாவை விரும்புகிறாள். நடாஷாவுக்கும் அவன் மீது காதல் வருகிறது. வான்யா ஒரு எழுத்தாளராக இருப்பது நிக்கோலாய்க்கு சற்று அதிருப்தி இருந்தாலும், அவன் நாவலைப் படித்த பிறகு அவனைப் புகழ்ந்து பெருமைப்படுகிறார். இதற்கிடையே இளவரசன் வால்கோவ்ஸ்கி நிகோலாய் அவர்களை தன் பண்ணையைக் கவனித்துக்கொள்ளுமாறு கூறுகிறான். நிகோலாய் அதனைப் பெருமையாகக் கருதி அவனுடைய மொத்த பண்ணையையும் கவனித்துக்கொண்டு பெரும் லாபத்தை ஈட்டி தருகிறார். வால்கோவ்ஸ்கியின் மகன் அல்யோஷா நிகோலாய் வீட்டிற்கு வேலை கற்றுக்கொள்ள வருகிறான். அல்யோஷாவின் வெகுளியான சிறுபிள்ளை தனமான குணத்தைக் கண்டு நட்டாஷாவுக்கு பிடித்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனைத் தெரிந்து கொண்ட வால்கோவ்ஸ்கி கடும் கோபம் கொண்டு, இது நிகோலாய் திட்டம் என எண்ணி அவன் மீது திருட்டு பழி சுமத்தி நீதி மன்றத்துக்குச் செல்கிறான். இதனை எல்லாம் தெரிந்து கொண்டு வான்யா நிகோலாய் வீட்டுக்கு வரும்போது, நடாஷா அல்யோஷாவுடன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள்.பின் வால்கோவ்ஸ்கி வேறு அரச குடும்பத்தைச் சேர்ந்த காத்யாவை அல்யோஷாவுக்கு அறிமுகம் செய்து வைக்க, அல்யோஷா காத்யாவின் மீது காதல் கொள்கிறான்.
பாகம் 2
நடாஷா தனியாக ஒரு வீட்டில் இருக்கிறாள். அல்யோஷா பெரும்பாலும் காத்யாவிடமே இருக்கிறான். அவ்வப்போது நடாஷாவை பார்க்க வருகிறான். அவனுக்குத் தான் யாரைக் காதலிக்கிறோம் என்று சரியாகத் தெரியவில்லை. நடாஷாவுக்கும் அவன் காத்யாவையே காதலிக்கிறான் என்பது தெரிகிறது. இதற்கிடையே வான்யா வீட்டுக்கு அடிக்கடி வரும் எலேனா என்கிற நெல்லி அவளும் அவள் அம்மாவும் பட்ட கஷ்டத்தை வான்யாவிடம் சொல்கிறாள். நெல்லியின் துயர் கண்டு வான்யா தன்னுடனே வைத்துக்கொள்கிறான். நெல்லிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது.
பாகம் 3
வால்கோவ்ஸ்கி நடாஷாவை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கோருகிறான். அவன் அல்யோஷாவுக்கும் அவளுக்கும் திருமணம் செய்துவைக்கச் சம்மதிக்கிறான். அது அல்யோஷாவை காத்யாவுடனே இருக்க வைக்க அவன் போட்ட திட்டமாக இருக்கிறது. அதுபோலவே அல்யோஷா கத்யாவுடனே இருக்கிறான். அவன் நட்டாஷாவுடன் வருவது குறைந்துவிடுகிறது. பின் வான்யாவும் காத்யாவை சந்தித்துப் பேசுகிறான். காத்யாவுக்கு நடாஷாவின் மேல் மரியாதையை இருக்கிறது. ஆனாலும் அல்யோஷாவை விட்டுக்கொடுக்க மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
பாகம் 4
காத்யா நடாஷாவை சந்தித்து அல்யோஷாவின் மகிழ்ச்சிக்காக அவனை தன்னிடம் விட்டுவிடும்படி சொல்ல, நடாஷாவுக்கும் அதுவே சரியென்று தோன்றுகிறது. அல்யோஷா காத்யா இருவரும் வேறு ஒரு நகரத்திற்குச் சென்று விடுகிறார்கள். அல்யோஷா ஒரு கடிதம் மூலம் காத்யாவை அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நட்டாஷாவுக்கு தெரிவிக்கிறான். நெல்லி அவள் அம்மாவுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் நடந்த சண்டையை நிக்கோலைக்கு சொல்ல அவன் மனம் மாறி வீட்டை விட்டு ஓடிப்போன நடாஷாவை ஏற்றுக்கொள்கிறான். நெல்லியின் உடல் நிலை மோசமாகி இறந்துபோகிறாள். நடாஷாவும் அவர்களது பெற்றோர்களும் வேறு ஒரு நகரத்திற்குச் செல்ல புறப்படுகிறார்கள். நடாஷா வான்யாவை அனைத்தையும் ஒரு கனவு போல மறந்துவிடுமாறு ஒரு குறிப்பாகச் சொல்லிச் செல்கிறாள்.
தஸ்தயெவ்ஸ்கி எழுதிய நாவலை முதன் முதலாகப் படிக்கிறேன். பொதுவாக ரஷ்ய நாவல்கள் பல கதாபாத்திரங்கள் வழியே அவர்களின் பல்வேறு உணர்வுகளை ஊடுருவிப் பார்ப்பதுபோல கதைக்களம் அமைக்கப்பட்டு மிக விரிவாக ஆராயப்பட்டிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவைகள் அன்றைய சமூகத்தின் மனநிலையை ஒரு கைப்பிடி அள்ளி நம்முள் வைக்கிறது. அந்த உணர்வுகள் மனித வாழ்க்கையினை புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவான பார்வையில் மகிழ்ச்சி என்ற ஒன்றே மனிதனுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன், வயது ஆக ஆக மகிழ்ச்சி என்ற உணர்வைத் தவிர மற்ற அனைத்து விதமான உணர்வையும் தன்னகத்தே கொண்டு வாழ்கிறான். மகிழ்ச்சி என்பது ஒவ்வொருக்குள்ளும் இருந்து ஆடி காலத்துக்குச் சென்று மறைகிறது. இது ஏன் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுவது. இதனை நடைமுறை வாழ்க்கையில் உடனடியாக கண்டுகொள்ள இயலாது. அதற்குத் தான் இலக்கியம் துணை புரிகிறது. குறிப்பாக ரஷ்ய நாவல்கள், அந்த ஒட்டு மொத்தத்தின் சாரத்தைச் சொல்வது போலக் கதைகள் வடிவமைக்கப்படுகிறது.
இந்நாவலிலும் பல்வேறு கதாபாத்திரங்கள் கதையை நகர்த்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு உணர்வை முதன்மைப் படுத்துவதுபோல கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இரக்க உணர்வு கொண்ட வான்யா, மற்றவர்களிடம் அன்பை மட்டுமே காட்டி தன் காதலனையே விட்டுக்கொடுக்கும் நடாஷா, நல்லெண்ணம் கொண்ட காத்யா, வஞ்சகமும், சூழ்ச்சியும் உணர்வு கொண்ட வஸ்கொவ்ஸ்கி, வெகுளித்தனமான உணர்வு கொண்ட அல்யோஷா, துக்கத்திலேயே இருக்கும் நெல்லி என பல்வேறு உணர்வுகள் கதாபாத்திரங்களாக ஒன்றோடு ஒன்று முட்டி மோதி வாழ்க்கையின் ஒன்று மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது, ஆக்கிரமிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
வான்யா எழுத்தாளனுக்குரிய முற்போக்குத்தனத்துடன் இருக்கிறான். தான் காதலித்த பெண் மற்றொருவனைக் காதலித்தாலும் அவளுக்காகத் தூது போகிறான். அவளுடைய வாழ்க்கை சீரழிந்து விடாமல் இருந்து அவளைப் பாதுகாக்கின்றன. நெல்லி, வால்கோவ்ஸ்கியின் மகள் என்று தெரிந்திருந்தாலும் அவள் மீது இரக்கம் கொண்டு அவள் மீது அளவுக்கதிகமாகவே அன்பு செலுத்துகிறான். வான்யா ஏன் இவ்வாறு இருக்கிறான் என்று பார்த்தால், அது அவன் சிறு வயதில் பெற்றோர்கள் இல்லாமல் யாரோ ஒருவர் வீட்டில் வாழ்ந்து, எழுத்தாளன் என்ற ஒரு நிலையை அடைகிறான். பெற்றோர்கள் இல்லாததால் எத்தனையோ முறை அதற்காக அவன் வருந்தியிருக்கக் கூடும். அந்த நிலையில் ஒரு சிறுமியை அவன் கண்டவுடன் அவளுக்காக மனமிறங்கி அவளைப் பாதுகாக்கிறான். வாழ்க்கையின் மீது எந்த வித பிடிப்பும் இல்லாமல், தனக்காக வாழாத ஒருவனாகவே இருக்கிறான். இந்நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவன் யாருக்கோ ஒருவருக்காகவே ஓடிக்கொண்டேயிருக்கிறான். நன்றாக எழுதக்கூடிய திறமை இருந்தும் அத்தனையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் அதனை வைத்து பொருள் ஈட்டி தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறான். இக்கதை அவனே சொல்வதுபோல இருப்பதால் அவனைப் பற்றிய மிகுந்த தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் ஒடுங்கிய தொனியில் இருப்பதால் அவனைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியவில்லை. எழுத்தாளர்களுக்கே உரியத் தன்மானத்தினை காத்துக்கொள்வதில் அதிக கவனமாக இருக்கிறான். வான்யா இறக்கும் தறுவாயில் மருத்துவமனையிலிருந்து எழுதுவது போல இருப்பதால், அவன் நடாஷாவையும் திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக யாருமற்று இருக்கிறான். வஸ்கொவ்ஸ்கி சொல்வது போல இந்து போன்ற மனிதர்கள் வாழ்க்கையில் என்ன மகிழ்ச்சியை அடைகிறார்கள் இறுதியில் என்று தெரியவில்லை.
இந்நாவல் நடாஷா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. அவளின் உணர்வின் மீது மற்ற உணர்வுகள் வேறு ஒரு கதாபாத்திரம் வழியே மோதி செல்கிறது. வான்யா அவனின் இரக்கக் குணத்தை அவளின் மீது செலுத்தி அவளிடமிருக்கும் அன்பைப் புரிந்து கொள்கிறான். நிகோலாய் தன் தகப்பனின் கோவத்தை அவள் மீது செலுத்தி அவளிடம் தோற்றுப் போகிறார். வஸ்கொவ்ஸ்கி தன்னுடைய வஞ்சகத்தைச் செலுத்தி அவளை மாற்ற நினைக்கையில் அது அவளிடம் எடுபடாது என்று தெரிந்து தோற்றுப் பயந்து ஓடுகிறான். காத்யா அவளின் அன்பைப் புரிந்து கொண்டு தானும் அவ்வாறு இல்லையே என்று ஏங்குகிறாள். நெல்லி தனக்குப் பிடித்த வான்யா நடாஷாவின் மீது வைத்திருக்கும் காதலைக் கண்டு நடாஷாவின் மீது பொறாமை கொண்டு பின் புரிந்துகொள்கிறாள். இப்படி அனைத்து உணர்வுகளும் அவளின் மீது பட்டு எதிரொலித்து இரட்டித்தும், தோல்வியுற்றும் செல்கிறது. நடாஷாவுக்கு இந்த அளவுக்கு அல்யோஷாவின் மீதான காதல் எப்படி உருவாகிறது என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. அல்யோஷா வெகுளித்தனமான உலக வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவனாக இருக்கிறான். இப்படி இருக்கும் ஒரு ஆணின் மீதி அவளுக்கு ஏன் அளவு கடந்த காதல் உருவானது. அவனில் இருக்கும் அந்த குழந்தைத்தனம். ஒரு இடத்தில் நடாஷா அவன் எதாவது தவறு செய்துவிட்டு வரும்போது அவனைக் கண்டிப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறாள். ஒரு தாயைப் போல அவனிடம் நடந்து கொள்வது அது. ஒன்றும் அறியாது குழந்தை மனமும் செயலும் கொண்ட ஒரு அலைகிற வாலிபன் ஒருவனை இரு பெண்கள் காதலிப்பது எப்படி சாத்தியம். பொதுவாகப் பெண்கள் அனைத்திலும் தெரிச்சியடைந்த முதிர்ச்சியடைந்த ஒரு ஆண்மகனையே விரும்புவார்கள் என்று கூறும்போது நடாஷாவுக்கு அதற்கு நேர் எதிரான ஒருவனைப் பிடித்திருக்கிறது. ஒரு யதார்த்த நாவலில் இது போன்ற ஒரு பெரிய உண்மையை எடுத்து வைக்கிறது. யதார்த்தத்தில் அது தான் உண்மை போல. நடாஷா தன் பெற்றோர்களைப் பிரிந்து போவது மனவருத்தம் கொடுத்தாலும் அவர்கள் ஒரு நாளில் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்துக்கொள்கிறாள். அதுவும் இருவரின் தகப்பனார்களும் விரதமாக இருக்கும் தருணத்தில். அந்த அளவுக்கு நடாஷாவுக்கு அவன் மீதான காதல் இருக்கிறது. பெற்றோர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்பதை அவள் நன்றாகவே உணர்ந்தவளாகத் தான் இருக்கிறாள். இருந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அல்யோஷா சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவளுக்கு முதன்மையாக இருக்கிறது. வான்யாவின் காதலையும் ஒரு கட்டத்தில் மறந்து போகிறாள். வான்யாவுக்கு பெரிய நன்றிக் கடன் பட்டிருப்பதாகச் சொன்னாலும் அவனை அவள் மீண்டும் காதலிக்கவில்லை. காதலித்த வான்யாவை விட்டு, பெற்றோர்களை விட்டு, அல்யோஷாவுக்காக சென்றவள், இறுதியில் அல்யோஷாவின் மகிழ்ச்சிக்காக அவனையே வேறு ஒருத்தியிடம் நடாஷா விட்டுக் கொடுப்பதை நினைக்கும் போது, அவளின் உண்மையான காதலைப் புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல காதலுக்காகக் காதலனை விட்டுக்கொடுக்கிறாள்.
வஞ்சகம் நிறைந்த ஒரு இளவரசனின் மகன் அல்யோஷா, எல்லோரையும் நம்பிவிடும் வெகுளித்தனமாக இருக்கிறான். அல்யோஷாவை மிரட்டி தன் வழிக்கு எப்படியும் மாற்றிவிட நினைக்கும் வால்கோவ்ஸ்கி அது நடக்காதபோது, அவன் வழியிலேயே சென்று அவனை ஏமாற்றி அவன் காதலை நடாஷாவிடமிருந்து பிரிக்கிறான். அல்யோஷாவுக்கு இது எதுவுமே தெரியாத ஒருவனாக இருக்கிறான். அவன் நடாஷாவையும் காதலிக்கிறான் அதே சமயம் காத்யாவையும் காதலிக்கிறான். அவனுக்குத் தான் யாரை உண்மையிலேயே காதலிக்கிறோம் என்பது தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் காத்யாவை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் அவனால் நடாஷாவை விட்டு விட மனமில்லை. ஒரு குற்ற உணர்வில் தவிக்கிறான். வான்யாவிடம் அதிகமாக மரியாதையை வைத்திருக்கும் அவன், வான்யா தனக்கு உதவ வேண்டும் பலமுறை சொல்கிறான். அவன் தன்னுடைய அப்பாவின் மீதும் நிறைய மரியாதையை வைத்திருக்கிறான். அவன் தன்னை ஏமாற்றமாட்டான் என்று முழுதாகவே நம்புகிறான். இப்படி எல்லோரையும் நம்பும் ஒருவனாகவே இருக்கிறான். இவனை எப்படி இரு பெண்கள் காதலித்தார்கள் என்பது வான்யாவை போலவே படிக்கும் போது நமக்கும் புரியவில்லை.
நடாஷாவுக்கு எதிர் துருவமாக வால்கோவ்ஸ்கி இந்த நாவலில் இருக்கிறான். இந்த நாவலின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் இவன் நிகழ்த்துகிறான் அல்லது இவனுக்காக மற்றவர்கள் நிகழ்த்துகிறார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கக் கூடியவனாக இருக்கிறான். பணக்காரனாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகவே ஆக ஆசைப்படுவது போல இவனும் அதை நோக்கியே செல்கிறான். ஆனால் தான் மற்றவர்களைப் போல அனைத்தையும் துறந்து பிறருக்காக வாழ்பவன் அல்ல என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். தன்னுடைய குணம் என்ன என்பதை வான்யாவிடம் சொல்கிறான். தான் ஒரு சுயநலவாதியாகவே இருக்க விருப்பம் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். அந்த அளவில் ஒரு உண்மையான மனிதனாக இருக்கிறான். தனக்குப் பெண்கள், பணம் இரண்டின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்று திறந்த மனதுடன் ஒத்துக்கொள்கிறான். அவனுடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஏதோ ஒரு சதிவலை இருக்கிறது என்பதை மற்றவர்கள் உணர்ந்திருந்தாலும் அவனிடம் ஏமாறாமல் யாருமில்லை.
காத்யா பணக்கார வீட்டுப் பெண். ஆனாலும் நடாஷாவை போலவே அவளும் உயர்ந்த பண்புகள் கொண்டவளாக இருக்கிறாள். அல்யோஷா முதலில் தான் நடாஷாவையே காதலிப்பதாக சொன்னவுடன், அவள் உடனே தன்னுடைய திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு அவனை நடாஷாவிடம் அனுப்பிவைக்கிறாள். இந்த கனத்தைக் கண்டவுடன் அல்யோஷா அவளின் மீது மிகுந்த காதலை அடைகிறான். காத்யாவும் நடாஷாவும் இரு வேறு பட்டவர்கள் போலில்லாமல் கிட்டத்தட்ட ஒரே மன நிலையில் இருக்கிறார்கள். அதுவே அல்யோஷாவுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காத்யாவிடம் பணம் இருப்பதனால் வால்கோவ்ஸ்கி அல்யோஷாவை அவளின் பக்கம் திருப்பிவிடுகிறான். இல்லையென்றால் அல்யோஷாவை நடாஷாவையே திருமணம் செய்துகொண்டிருக்க வாய்ப்புள்ளது.
இக்கதையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவமதிப்போ, சிறுமையோ அடைகிறார்கள். வாழ்க்கையில் அவமதிப்பு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் வாழ்க்கையின் அத்துணை நெறிகளையும் கடைப்பிடிக்கும் ஒருவர், அதனைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவரால் சட்டென அவமதிப்பு செய்யப்படும்போது, அவரால் என்ன செய்துவிட முடிகிறது. பாதிக்கப்பட்டவர் மீதும் அவருக்கு உண்டான நல்லெண்ண விதிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அவமதிப்பு செய்பவருக்குத் தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறார். அது எவ்வாறு மற்றவரைப் பாதிக்கும் என்பதும் தெரிந்துள்ளது. அது அவருடைய குணம் அல்ல. அவர் செய்யும் அந்த செயல் எளிதாக மற்றவரைப் பேச விடாமல் செய்யும் ஒரு தந்திரம் மட்டுமே. அந்த தந்திரத்தை அவர் எளிய மனிதர்களிடத்தில் உபயோகப் படுத்துவார்கள். ஒருவரை அவமதிப்பு செய்வது என்பது வாழ்க்கையின் நெறிகளுக்கு எதிரானது. பணமும் அதிகாரமும் கொண்டவர்கள் அந்த நெறிகளை முற்றிலும் துறந்து வாழ்வது எளிதானது. மிக விரைவாக ஒன்றை அவர்களால் சாதித்துக்கொள்ள முடிகிறது. அது ஒரு கருவி அவர்களுக்கு. உண்மையாகவும், மற்றவர்களிடம் அன்பு காட்டவும், நேர்மையாகவும் இருப்பவர்களிடம் பணமும், அதிகாரம் இருக்கும் போது மட்டுமே அவர்களை மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த குணங்களைக் கொண்டவர்கள் பெரும்பான்மையானவர்களிடம் பணமோ, அதிகாரமோ இருப்பதில்லை. இக்கதையிலும் பணமும் அதிகாரமும் வைத்திருக்கும் வால்காவ்ஸ்கி மற்றவர்களைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவமதித்துக்கொண்டே இருக்கிறான். அப்படி இருப்பதை நியாயப்படுத்திக்கொள்கிறான். ஒவ்வொருவரின் நிலையை உபயோகப்படுத்திக்கொண்டு தனக்குத் தேவையானதைப் பறித்துக்கொள்கிறான். அவர்களிடம் இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசி மிக நைச்சியமாகப் பேசி, அவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்படுவது போல இரக்கப்பட்டுச் சொன்னாலும் உள்ளுக்குள் ரசித்துக்கொள்கிறான். இவனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் அவனை கௌவரமாக எச்சரிக்க மட்டும் தான் முடிகிறது. அவனை மேலும் அவமானப் படுத்த அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. இந்த ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு, நாம் இவர்களை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் பதிலுக்கு அவர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவன் தன் வழியில் சென்றுகொண்டே இருக்கிறான். அதில் அவன் வெற்றியும் பெறுகிறான்.
Comments
Post a Comment