ஒரு புளியமரத்தின் கதை - ரசனையுரை


திரு. சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றிய அறிமுகம் திரு.ஜெயமோகன் அவர்கள் வழியாகவே எனக்குக் கிடைத்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய அணுக்கமான ஆசிரியர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி என்று மிக உயர்ந்த இடத்தில் ஜெயமோகன் வைத்திருப்பதின் மூலம் சுந்தர ராமசாமியின் அறிவார்ந்த இலக்கிய திறனும் அதில் அவருடைய பெரும் பங்கும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எனக்குச் சுந்தர ராமசாமியின் அவர்களின் படைப்புகளை எங்கிருந்து தொடங்குவது என்ற ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு முதல் காரணம் என் நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பு ஜெயமோகனிலிருந்து தொடங்கி அவரின் வழிகாட்டுதலின் மூலம் பின்னோக்கி நகர்ந்து பல இலக்கிய ஆளுமைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரும் மனத்தடங்களாக எனக்கு இருந்தது, அவ்வாசிரியர்கள் பயன்படுத்தியிருக்கும் கவித்தன்மையும் உருவகங்களும் இன்று தேய் வழக்காகி நவீனத்தன்மையற்ற தன்மை ஒன்று இருப்பது போல இருந்ததால் அதில் மனம் ஒத்துப் படிக்கச் சற்று சிரமமாக இருந்தது. அதன் யதார்த்தம் புரிந்தாலும் ஏனோ மனம் ஒன்றி படிக்க இயலவில்லை. ஆனாலும் அவைகளையும் மீறி அவர்களின் படைப்புகளிலிருந்த வாழ்க்கையனுபவமும் இலக்கிய உன்னதமும் என்னை ஈர்க்காமலில்லை. இந்த மனநிலையைக் கடந்த பின்பு  சுந்தர ராமசாமியின் படைப்புகளை அணுகவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜெயமோகனின் இணையதளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கான பதிலில் ஜெயமோகன் "ஒரு புளியமரத்தின் கதை" என்ற நாவல் நவீன இலக்கியத்தில் சமூக மாற்றத்தின் இழப்பையும் வெற்றியையும் பற்றிப் பேசும் முக்கியமான தமிழ் நாவல் என்று குறிப்பிட்டிருந்தார். ஏனோ அது எனக்குச் சுந்தர ராமசாமியின் படைப்புகளை அணுக ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றெண்ணி இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். இன்று அதனைப் பற்றிய ரசனையுரை எழுதும் அளவுக்கு என்னைக் கொண்டு வந்திருப்பது எது என்று என்னுள் எழுந்த கேள்விக்குச் சுந்தர ராமசாமியின் அவர்களின் எழுத்தும் அவரின் கதாபாத்திரங்களின் வடிவங்களும் எதையும் ஒரு எள்ளலுடன் சொல்வதுபோலவே அவரின் எழுத்தில் இருக்கும் தொனியும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். 


கதைச்சுருக்கம்

அதன் தொடக்கம் எப்போது என்று யாருக்கும் தெரியாத ஒரு காலத்தில் மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் முளைத்த ஒரு புளியமரம், சில நல்ல மனிதர்களால் கண்டடையப்பட்டுப் பராமரிக்கப்பட்டு பின்பு காலமாற்றத்தில் சுயநலமிக்க சிலரால் உதாசீனப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவதே இக்கதை. இந்நாவல் அந்த புளியமரம் இறந்தபின்பு கதைசொல்லி ஒருவரால் தொடங்கப்படுகிறது. கதைசொல்லி தன் கல்லூரி பருவத்தின் போது பார்த்து வியந்த தாமோதர ஆசான் என்ற ஒரு பெரியவரின் வழியாக புளியமரத்தின் தொன்மத்தை பல்வேறு கதைகளின் வழியே தெரிந்துகொள்கிறார். கற்பனை வளமும் கதை சொல்லும் திறனும் கொண்ட  தாமோதர ஆசான் புளியமரத்தை ஒட்டி நடந்ததாகச் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் இந்தியா வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது நடப்பதாக இருக்கிறது. பின்பு கால நகர்வில் இந்தியச் சுதந்திரப் போராட்டம் நடைபெறும் பொழுதில் எவ்வாறு அப்புளியமரம் சுற்றிய இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் உபயோகத்துக்கு வந்தன என்று தாமோதர ஆசான் விவரிக்கிறார். அதற்குப் பின் இந்தியா சுதந்திரம் அடைந்து மக்களாட்சி நடைபெறும் பொழுதில் எவ்வாறு அப்புளியமரம் சில வியாபார மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகச் செய்யும் அரசியலில் சிக்கிக்கொண்டு அழிந்துபோனது என்பதைத் தாமோதர ஆசானுக்குப் பின்பு அக்கதைசொல்லியே சொல்லுகிறார். 


கதாப்பாத்திரங்கள்

இந்நாவலில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் வழியே மனிதனின் மனம் எவ்வாறு காலப்போக்கில் மகத்தான ஒரு புள்ளியிலிருந்து நகர்ந்து சுயநலமிக்க ஒரு புள்ளிக்கு இடம்மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.  

எண்பது வயதாகி சற்று மிகைப்படுத்திக் கதை சொல்லும் தாமோதர ஆசானைப் போன்ற ஒரு பெரியவரை, இந்நாவலைப் படிக்கும் எல்லோரும் அவரவர் வாழ்வில் கடந்துதான் வந்திருப்பார்கள்.வீட்டிலோ அல்லது தெருவிலோ ஒரு ஊணுக்காம்பை வைத்துக்கொண்டு "அந்தகாலத்தில நாங்களெல்லாம்.." என்று ஆரம்பித்து சற்று மிகைப்படுத்திக் கதை சொல்லும் ஒரு பெரியவர் இருப்பார். அதனால் தான் ஒரு சில விவரணைகளை சொன்னவுடன் இக்கதையில் வரும் தாமோதர ஆசானை மிக எளிதாகவே மனம் கண்டுகொள்கிறது. தாமோதர ஆசான் சற்று மிகைப்படுத்தி அக்கால கதைகளைச் சொன்னாலும் அந்த கற்பனையை வட்டார வழக்கில் சொல்லும் அந்த அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவே படிக்கும்போது நாமும் அவருக்கு முன்பு அமர்ந்து ஆர்வமாகக் கதை கேட்பது போலவே செய்துவிடுகிறது. அவர் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பார்க்க மனம் முயற்சியே செய்வதில்லை. ஒரு சுகவாசியாக, ரசனைமிக்க, தன்னால் எல்லாம் முடியும் என்று வாழ்வதுபோல வெளியே காட்டிக்கொண்டாலும் அவருக்குள் யாராலும் ஊடுருவமுடியாத ஒரு ரகசிய வாழ்வொன்றை அவர் வாழ்ந்துகொண்டிருப்பது  தாமோதர ஆசானின் யதார்த்த வாழ்க்கையை மறைமுகமாகக் காட்டி செல்கிறது. அது இன்னும் அவரை அணுக்கமாக உணரவைக்கிறது. அத்துணை மிகையுணர்ச்சிகளும் தன்னுள் இருக்கும் சோகத்தை மறந்து இருக்கும் பொருட்டே அவர் அப்படி வெளியே இருக்கிறார் என்று புரிந்துகொள்கிறேன். ஆசான் சொல்லும் கதைகளும் சம்பவங்களும் கட்டுக்கதையாக இருந்தாலும் அந்த திறமை தான் அப்புளியமரம் அப்போதே வெட்டுப்படாமல் கொப்ளானிடமிருந்து காக்கிறது. கட்டுக்கதைகள் மூலம் காப்பாற்றப்பட்ட அப்புளியமரம் பின்னாளில் அவைகள் பழைய கதைகள் என்று யாதார்த்தை கண்டுபிடித்த முற்போக்குவாதிகள் அதனை ஒரு வெறும் மரமாகக் கண்டு மரிக்கவைப்பது யதார்த்தத்தில் ஒளிந்திருக்கும் அபத்தத்தைக் காட்டுகிறது. ஆசான் அவருடைய எண்பது வயதில் செல்லத்தாயியை வர்ணிக்கும் இடங்களில் ஒரு எளிய மனிதருள் இருக்கும் ரகசிய மனதைத் திறந்து காட்டினாலும், அப்புளியமரத்தை தன் சாமர்த்தியத்தால் வெட்டவிடாமல் செய்து இயற்கையின் மீது அவருக்கு இருக்கும் பேரன்பையும் வெளிப்படுத்தி மகத்தான ஒரு மனிதராகி விடுகிறார். 

அப்துல்காதர் தன் சிறுவயதில் தன் தகப்பனால் இனி தனக்கோ தன் அம்மாவுக்கோ நல்லது ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்தவுடன் அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் பணம் ஒன்றே குறிக்கோளுடன் பல வேலைகள் செய்கிறான். வறுமை ஒருவனுக்குப் பணம் மீதான ஆசையை ஏற்படுத்தும் அல்லது அதன் தன்மையை உணரச் செய்து ஆசையைக் கட்டுப்படுத்தும். காதருக்கு ஆசையை அதிகமாக ஏற்படுத்தி அவன் முன்னகரும் பாதைகள் அனைத்தும் பணம் பெருகுவதற்கான பாதைகளாகவே இருப்பதுபோல தேர்வுசெய்கிறான். பணத்தின் மீதான ஆசை கொஞ்சம் கொஞ்சமா வேரூன்றுவதைத் தன்னை நம்பிய பிள்ளையையும் கோபால அய்யரையும் சாமர்த்தியமாக ஏமாற்றி கடையை தனக்கே உரித்தாக்கிக் கொல்வதிலிருந்து பின்பு தனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் அவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அவரின் கடையையும் எடுத்துக்கொள்கிறான். இறுதியில் அதே பணத்துக்காகவும், பதவிக்காகவும் புளியமரத்தை அழிக்க அவன் செய்யும் செயல் அவனின் மீது எந்த வித ஆசிரியத்தையோ அல்லது இரக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. தன் அம்மாவுக்கு அவள் ஆசை தீர அனைத்தையும் செய்துவிடவேண்டும் என்று கண்ணீர் விடும் அதே அப்துல்காதர் தன் வியாபாரத்தின் சூனியத்தில் அவனே சிக்கி தன் எதிரியைப் பழிவாங்க யாருக்கும் தீங்கேதும் செய்யாது நின்றுகொண்டிருந்த புளியமரத்தை அழிப்பதற்கு அவன் துணை நின்றபோது அவன் எளிய மனிதனுக்குண்டான சுயநலத்தின் பக்கம் மாறுகிறான். 

தாமு தன் தாய் வேறு ஒருவருடன் ஓடிவிட தன் சகோதரனால் வளர்க்கப்பட்டவன். பெரியவனாகி சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு போலீசின் அடிக்குப் பயப்படாமல் புரட்சி செய்தவன்.ஆனால் அந்த புரட்சி மூலம் மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையின் போதையில் மூழ்கி உணர்ச்சிகரமாகப் பேசுவதும் நியாயங்களைத் தட்டி கேட்பது போலவும் நடிக்க ஆரம்பிக்கிறான். பின்பு அதையே ஒரு தொழிலாக ஆக்கிக்கொண்டு முழு நேர சுயநலமிக்க ஒரு அரசியல்வாதியாக முயல்கிறான். சுதந்திரம் கிடைத்தபின்பு வேறு விஷயங்கள் இல்லாமல் போனதால் காதருடன் ஏற்பட்ட மோதலை வைத்துக்கொண்டு மீண்டும் தன பெயரை நிலைநாட்ட அனைத்து வேலைகளையும் செய்கிறான். புளியமரம் வெட்டக்கூடாது என்று இவன் செய்த முயற்சிகள் கூட காதர் அதனை வெட்டவேண்டும் என்று சொன்னதற்காகவும் தன கடையின் வியாபாரம் பாதிக்கக் கூடும் என்ற சுயநலத்துக்காகவே.   

 

எழுத்தில் நான் ரசித்தவைகள்

இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கத் தொடங்கும் முன்னரே, இந்நாவலின் தலைப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இத்தலைப்பில் இருக்கும் புளியமரம் ஒரு குறியீடாக இருக்கும் என்று யூகித்துக்கொள்வது இன்றைய நல்ல இலக்கிய வாசகர்களுக்குச் சற்று எளிதாகவே இருக்கும். ஆனால் அது என்ன என்ற 'கண்டுபிடிக்கும்' ஆவலுடன் இக்கதையைப் படிக்கும் போது அதில் ஒன்றைத் தவறவிட்டுவிடுகிறோம். அது இந்நாவல் கொடுக்கும் ஒரு வாழ்க்கையனுபவம். அதுவே என்னளவிலும் நான் முதல் முறை படித்தபோது நிகழ்ந்தது. பின் இரண்டாவது முறை படிக்கும் போது கதாபாத்திரங்களின் பல நுண்ணுணர்வுகளின் மூலம் அவ்வாழ்வனுபவத்தைக் கண்டுகொண்டபோது ஒரு தரிசனமாக என் முன்னால் வந்து நின்றது. 

கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சுந்தர ராமசாமியின் எழுத்தில் இருக்கும் எள்ளலான நடை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கவைக்கிறது. கதாபாத்திரங்களின் வடிவங்களும் அவர்கள் பேசும் மொழிகளும் வட்டார வழக்கிலிருந்தாலும் அவர்களிடையே அவர்களின் குணத்தை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்குச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. தாமோதர ஆசானின் மூலமாகச் சுந்தர ராமசாமி சொல்லும் கதைகள்  ரசிக்கக் கூடியதாக இருக்கின்றன. அவைகள் வெறும் கதைகள் என்று சொல்லமுடியாமல் அவைகளில் படிமமாக ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்கிறேன். இந்தியா வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் இருக்கும்போது நடந்ததாகச் சொல்லப்படும் கதைகளில் இருக்கும் புளியமரம் யாரும் அவ்வளவு எளிதாக அடையமுடியாதபடி தண்ணீரால் சூழ்ந்திருக்கிறது. பெண்கள் அதை அடைவது என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளமுடியாத செல்லத்தாயின் இறப்பு மேலும் அவர்களிடையே அச்சம் சூழ்ந்து தவிர்க்கப்படுகிறது. இதனைப் படிக்கும்போது இந்திய மக்களின்  அவர்களின் உரிமைகளை அவ்வளவு எளிதில் அடையமுடியாதபடி ஒரு இடத்திலிருந்த காலகட்டமாகவே பார்க்கிறேன். அவைகள் புரிந்துகொள்ள முடியாத தொன்ம கதைகளின் மூலம் விலகியே இருந்திருக்கிறது. பின்பு அப்புளியமரம் இருந்த இடம் திருநாள் மகாராஜா என்ற ஒரு நல்லவரின் மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த இடத்தினை சுற்றி நாற்றம் ஏறி இருந்த குளத்தினை மூடி சரிசெய்து அந்த புளியமரத்தை மக்கள் எளிதாக நெருங்கிட வழி செய்கிறார். இது மக்களுக்கு அவர்களின் உரிமைகளைக் காட்டி அதை அடைவதற்கான ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றே எடுத்துக்கொள்கிறேன். நாளடைவில் அப்புளியமரம் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் தேவைக்கான ஒரு இடமாக, மக்கள் ஒன்றுகூடும் ஜங்க்ஷனாக மாறுகிறது. இந்த காலகட்டத்தில் தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களின் ஒற்றுமையில் சுதந்திரப் போராட்டம் நடக்கிறது. பின் நாளடைவில் சுதந்திரப் போராட்டம் முடிவடைந்து இந்தியச் சுதந்திரம் அடைந்த பின்பு புளியமரத்தை சுற்றிலும் பல்வேறு கடைகள் வளர்ந்து அப்புளியமரத்தின் நிழலை முற்றிலும் அம்மக்கள் அனுபவிக்கிறார்கள். நாளடைவில் போட்டியும் பொறாமையும் ஒற்றுமையின்மையும் ஏற்பட்டு அந்த புளியமரத்தை விஷம் வைத்து அழிக்கிறார்கள். மக்களாட்சி ஏற்பட்டு அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைத்து அதை அனுபவிக்க வேண்டிய மக்கள் அவர்களின் சுயநலத்தால், கிடைத்த உரிமையைத் தவறான வழியில் பயன்படுத்தி அதை அழித்துக்கொள்கிறார்கள். 

Comments

Popular posts from this blog

கோபல்ல கிராமம் - ரசனையுரை

உணரும் தருணம்