நிலம் பூத்து மலர்ந்த நாள்

 பள்ளியில் படித்த தமிழ்ச் சங்க பாடல்கள் மிகுந்த அயர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது. அதற்கு பெரும் காரணம் என்று இன்று நான் நினைப்பது பள்ளியைத் தவிர வேறு எங்கும் அந்தப் பாடல்களைக் கேட்க இயலாது போனதும், குறைந்தபட்சம் அதன் வார்த்தை உபயோகங்கள் பொதுவில் இல்லாமல் போனதும். மேலும் இதன் அழகியலையும், நுண்ணுணர்வுகளையும் புரிந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட வயதினை கடந்து, வாழ்க்கையின் சில அனுபவங்களை அடைய வேண்டியதாகிறது. தலைவனைப் பிரிந்த தலைவி பசலையால் வாடினாள் என்பதை அப்போது எட்டாம் வகுப்பு படித்த என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அகநானூறும், புறநானூறும் பொருளாதாரத்தை உயர்த்த எங்கும் பயன்படப்போவதில்லை எனும்போது வாழ்க்கையில் இதன் தேவையென்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. புற வாழ்க்கையின் தேவையை மட்டுமே சரிசெய்யும் பொருளாதாரம், எந்த விதத்திலும் நம் ஈராயிரம் ஆண்டு பண்பாட்டை ஒரு போதும் பாதிக்காமல் இருப்பதைப் புரிந்துகொள்வதற்கு இவை உதவிசெய்கின்றன என்றே எண்ணுகிறேன்.

திரு. மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய "நிலம் பூத்து மலர்ந நாள்" நாவலைத் தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ "நிலம் பூத்து மலர்ந்த நாள்" என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். இப்புத்தகம் ஒரு கதையினூடே சங்க பாடல்களின் தருணங்களை மிக நேர்த்தியாகக் கொண்டுவந்ததுமட்டுமல்லாமல், வரலாற்றின் முக்கிய ஆளுமைகள் பரணர், கபிலர், நன்னன், வேள் பாரி, ஒளவையார் போன்றோர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டுவந்தது இதன் சிறப்பு. இடையே வரும் சங்க பாடல்களும், உவமைகளும் அவ்வளவு அழகு.
"பறித்தெறியப்பட்ட வேர்களைப் பற்றிச் சிந்தித்தால், பச்சையங்களால் படர முடியாது. பறந்தடையும் நேரத்தை அஞ்சினால் கரையான் புற்றின் ஈசல்களுக்கு இறக்கை முளைக்காது."
"பறவைகள் போலக் காற்றுவெளியில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச்செல்கிறோம்"
தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. கதை படிக்கும் ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒன்று.

Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்