கோபல்ல கிராமம் - ரசனையுரை


திரு கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன். அது பற்றிய என் பார்வை.

கோவில்பட்டிக்கு அருகே கோபல்ல என்ற கிராமத்தில் நடக்கும் இக்கதை பாளையப்பட்டுகள் தங்கள் அரசை இழந்து வெள்ளையர்கள் (கும்பினி) ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்த கோட்டையார் குடும்பம், ஊரில் தன் குடும்பத்துக்கே உரிய மரியாதையையும், கௌரவத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் இழந்து இருந்தது அப்போது. ஊரில் நடக்கும் அனைத்துப் பஞ்சாயத்துகளும் கோட்டையார் குடும்பத் தலைமையில் தான் நடக்கிறது. அக்குடும்பத்தில் மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர். குடும்பம் சார்ந்து இருக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் ஓர் இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களைத் தவிர அக்கையா என்பவரும் அக்குடும்பத்திலேயே சிறு வயதிலிருந்து அங்கேயே அவர்களுடன் வாழ்கிறார். அதோடு ஊர்குடும்பன் என்ற மற்றொருவர் எடுபிடியாக அங்கே இருக்கிறார். இவர்களுடன் நூத்தி முப்பத்தேழு வயதில் பூட்டி மங்கத்தாயாரு அம்மாளும் படுத்த படுக்கையாக இருக்கிறார். இக்கதை அவ்வூரின் ஊருணியில் நடக்கும் ஒரு பெண் கொல்லப்படுவதிலிருந்து தொடங்குகிறது. பின்பு கோபல்ல என்ற கிராமத்தை எப்படி இவர்களின் புலம்பெயர்ந்த மூதாதையர்கள் உருவாக்கினார்கள் என்பதை மங்கத்தாயாரு அம்மாளின் மூலம் விவரிக்கப்படுகிறது. அதன் பின் அக்கிராமம் வளர்ந்து தற்போது அவ்வூரில் இருக்கும் வெவ்வேறு தொழில் செய்து வாழும் நாயக்கர்கள் மற்றும் அவர்களின் பெயர்க்காரணங்களுடன் விவரிக்கிறது. இறுதியாகத் தொடக்கத்தில் நடந்த கொலைக்குத் தீர்ப்பு அளிக்கப்பட்டு அப்பெண்ணைக் கொலை புரிந்தவனுக்குத் தண்டனை கொடுத்து நியாயம் வழங்குகிறது கோட்டையார் தலைமையில் நடந்த பஞ்சாயத்து. அதன் பின்பு மெல்ல அவ்வூர் வெள்ளையர்களின் பிடிக்கு வந்து பின்பு விக்டோரியா மகாராணியின் தலைமையை ஏற்று அவ்வூர் நல்ல செழிப்படையும் என்று நம்பி இருக்கிறார்கள். ஆனால் நாளடைவில் அவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி மீதான நம்பிக்கை இழந்து இந்தியச் சுதந்திரத்துக்குக் காத்திருந்தனர் என இந்த நாவல் முடிவடைகிறது.

தமிழ் நாவலுக்கென இருக்கும் வழக்கமான கதை சொல்லும் முறையும் அதற்கென இருக்கும் வடிவமும் இல்லாமல் இருந்தாலும் இந்நாவலில் உள்ளே வாழும் மனிதர்களும் சம்பவங்களும் அனைத்தையும் மறந்து ரசிக்க வைக்கிறது. இந்நாவலில் தொடக்கத்திலேயே ஒரு கொலை செய்யப்படுவதாகக் காட்டிவிட்டு அதற்குப் பின்பு கோட்டையார் குடும்பம், அவ்வூர் உருவான வரலாறு, கொள்ளையர்களிடம் அவர்கள்  சந்திக்கும் இன்னல்கள் எனப் பலவற்றைச் சொல்லிவிட்டு இறுதியாக அக்கொலை பற்றிய தீர்ப்பும் தண்டனையும் வருவது வாசகர்களை இந்நாவலின் மையத்தை நோக்கி இழுக்கும் உத்தியாகவே பார்க்கிறேன். அம்முயற்சியும் வெற்றிபெறுகிறது. ஒரு சமயத்தில் அப்படி ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதையே மறந்து பின்பு கோவிந்தப்ப நாயக்கர் வந்து தான் நினைவுபடுத்துகிறார். 

நாவல் முழுவதும் தனித்தனியாக நிறையச் சம்பவங்கள் நடக்கின்றன. அவைகள் ஒரு கால கட்டத்தில் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால் இச்சம்பவங்கள் தாங்கி இருக்கும் செய்திகளும், உணர்வுகளும் அப்போதைய காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.

வட்டார வழக்குச் சொற்களுடன் விவரிக்கப்படும் இக்கதை படிக்கும் நம்மை மிகுந்த கவனத்துடன் படிக்க வைத்து கதைக்குள்ளும், பாத்திரங்களுக்குள்ளும் உள்ளிழுத்துக்கொள்கிறது. ஆசிரியரின் நில விவரிப்பு காட்சிகள் மற்றும் அதனை ஒட்டி வாழும் மிருகங்கள் எனச் சொல்லி ஒரு காட்சியை மிக எளிதாக நம்மைக் கற்பனை செய்ய வைத்து வாழ்க்கையில் இதுவரை நாம் அடையாத ஒரு பெரிய அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.  குறிப்பாகச் சாலை வழியாக நடந்து வரும் அப்பெண் தாகத்துக்கு ஊருணி இருக்கும் இடத்தின் அடையாளத்தைச் சொல்லியிருக்கும் இடம்.  பின்பு ஊருணியைச் சுற்றி ஒன்று மற்றொன்றை அழிக்கக் காத்திருக்கும் விலங்குகள் கடைசியாக மனிதர்கள் என ஒரு தண்ணீர் நிறைந்த ஒரு குளம் எப்படி உணவு சங்கிலியாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்கிறது.   

மங்கத்தாயாரு அம்மாள் அவ்வீட்டில் புறவயமாக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் காலம் போல இருந்து அவர்கள் எப்படித் தெலுங்கு தேசத்திலிருந்த இஸ்லாம் மன்னரிடமிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்து ஒரு பொட்டல் வெளியைச்  சீர் செய்து ஒரு கிராமத்தை உருவாக்கினார்கள் என்று சொல்லும் உள்கதை முக்கியமானதாக இருக்கிறது. அக்கதையில் நடந்ததாகத் தன் பேரன்களுக்கு மங்கத்தாயாரு பூட்டி சொல்லும் சில நிகழ்வுகள் யதார்த்தத்தை மீறி ஓர் அமானுஷ்யத் தன்மை இருந்தாலும் அவைகள் ஒரு துன்பமான காலகட்டத்தில் நம்மை மீறி ஒன்று நடக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே சொல்லப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்கிறேன்.  

இந்நாவலில் எனக்கு மிகவும் பிடித்தவை காட்சிகளை ஆசிரியர் விவரிக்கும் இடங்கள். குறிப்பாக முதல் அத்தியாயத்தில் வரும் அந்தத் தொடக்கம். ஒரு கிராமம் எப்படிக் காலையில் விடிந்து விழிப்பு கொள்கிறது என்பதை ஒரு பறவையின் பார்வை போல மேலிருந்து கீழ் நோக்கிச் சொல்லியிருக்கும் விதம் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இந்த மாதிரியான ஒரு கோணம் இப்போது பல நாவல்களிலும், திரைப்படங்களிலும் பார்த்துத் தேய்ந்து போன ஒரு விவரிப்பாக இருந்தாலும், திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் காலத்தில் இது ஒரு புதிய விவரணையாக வித்தியாசமாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அதன் பின் சென்னாதேவியின் பலதரப்பட்ட சிரிப்புகளைப் பற்றி வர்ணித்திருக்கும் இடம் மிகுந்த ரசனைக்குரியது. குறிப்பாகப் புல்லாக்கில் தொங்கும் ஒரு முத்தை பற்றி சொல்லியிருக்குமிடம் (புல்லாக்கில் அப்படி ஒரு முத்தை கோத்து, பற்களுக்கு நேராய் தொங்க விடனும் என்று ஒரு ஆசாரிக்கு தோணியிருக்கே, அது எப்பேர்ப்பட்ட ரசனை)    

கோவிந்தப்ப நாயக்கரின் வெற்றிலை போடுமிடம் எனக்கு எங்களூர் கும்பகோணம் மனிதர்களை நினைவுபடுத்தியது. அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து வெற்றிலை போட்டு எழுந்த பிறகு வெற்றிலை காம்புகள் பாக்கு சீவல் எனச் சிந்திக்கிடக்கும். ஒரு அமர்வுக்குக் குறைந்தது மூன்று முறை வெற்றிலை போடுவார்கள். இப்படி கோவிந்தப்ப நாயக்கர் போல  வெற்றிலை சேர்மானம் சரியாக வரும் வரை அந்த நாளை முடிக்கமாட்டார்கள். 

விவசாயப் பின்னணியிலிருந்து வந்த ஆசிரியர் ரெட்டைக்கலப்பையின் மகத்துவத்தையும் அது  கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஓரிடத்தில் விவரித்திருப்பது முக்கியமான ஒரு பதிவு. 

இந்நாவலில் துண்டுத்துண்டாகப் பல சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் எந்த ஒரு சரடோடும் இணையாமல் ஒரு வரலாற்றுப் பார்வையாகவே இருக்கிறது. மேலும் நாவல்களில் வரும் பல நாயக்கர்களின் கதாபாத்திரங்களும் அவர்களின் பெயர்க்காரணங்களும் ரசிக்கமுடிகிறது. ஆனால் அவர்களின் மன ஓட்டமென்று எதுவுமில்லை. வெள்ளையர்கள் ஆட்சி வந்த பிறகு அவ்வூர் மக்கள் படும் இன்னல்களைச் சற்று விரிவுபடுத்திச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவைகள் மற்ற நாவல்களில் காட்டும் அதே கோணமும் வீழ்ச்சியும் இருக்கும் என்பதால் தவிர்த்திருக்கலாம் ஆசிரியர் என்று நினைக்கிறேன். 

கதாபாத்திரங்களைப் பற்றிய குணநல வர்ணனை என்று ஏதும் தனியாக இல்லாமல் இருந்தாலும் அவர்கள் செய்யும் சில செயல்களை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எளிதாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. பத்துத்தரம் வெற்றிலை போடுகிற கோவிந்தப்ப நாயக்கர்,  வாயெல்லாம் வெற்றிலை போட்டு ஓரத்தில் அதை அதக்கிக் கொண்டும், அவ்வப்போது ஓரத்தில் வழியும் எச்சிலைத் துண்டால் துடைத்துக்கொண்டும்,  பேசும்போது தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்துப் பேசுபவராகத்தான் இருக்க வேண்டும். அதனாலேயே அதிகம் பேசுபவராக இல்லாமல், அனைத்தையும் தலை அசைப்பிலோ அல்லது கை அசைவிலேயே பேசக்கூடியவராக இருப்பர் என்றே யூகிக்கத் தோன்றுகிறது. 

கடைசியாக மங்கத்தாயாரு அம்மாள் வெள்ளையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கேட்கும் கேள்வி மிக முக்கியமானது " அவன் இதுவரை நம்ம பெண்டுகளுக்கு எதாவது தொந்தரவு கொடுத்துருக்கானா?" அவ்வூர் மக்கள் அனைவரும் இல்லை என்பது போல மௌனாக இருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான பதிவாகவே பார்க்கிறேன்.  


Comments

Popular posts from this blog

உணரும் தருணம்