பைதல் பாகன்

 

 

 

பெருஞ்சோறு பயந்துபல்யாண்டு புரந்த

பெருங்களிறு இழந்த பைதற் பாகன் 

அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,

வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,

கலங்கினேன் அல்லனோ யானேபொலந்தார்த்

தேர்வண் கிள்ளி போகிய

பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

 

 

யானை ஏனோ எந்த வயதிலும் அலுப்புத்தட்டுவதேயில்லை. அதிலும் யானையின் உடலசைவுகள் ஏனோ மனதுக்குள் குதூகலம் ஒன்றைச் சட்டென ஏற்படுத்திவிடுகிறது. தினசரி கவலைகளில் திரிந்த மனம் அனைத்தையும் உதறி ஒரு புள்ளியில் குவிந்து இலகுவாகிவிடுகிறது. தெருவில் யானை செல்லும்போது உறைந்து சலனமற்று நிற்பவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோ அந்த பிரம்மாண்டத்தினுள் இருக்கும் சிறு குழந்தைத்தனம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடந்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது போலும். கோவில்கள் நிறைந்த எங்களூரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும்.பெரும்பாலும் பாகனுக்காக இரந்து கொண்டிருக்கும் அதனை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துசெல்ல முடியாது. சிறிது நேரம் நின்று அதன் அசைவுகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். வெளியுலகத்துக்கு நன்கு பழக்கப்பட்ட அவைகள் பெரும்பாலும் சாதுவாகத் தும்பிக்கையால் "புஸ்..புஸ்" எனத் தரையில் எதையோ துழாவிக்கொண்டும்காலை முன்னும் பின்னும் மாற்றி வைத்துச் சிறு நடனம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டும் இருக்கும். நான் யானையை நின்று ரசிக்கக் கற்றுக்கொண்டது என் பெரியப்பாவிடமிருந்துதான். அப்போது ரயில்வே துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அம்மா காய்கறி வாங்குவதற்குக் கொடுக்கும் ஒரு நைலான் கூடையைப் போல ஒன்றை எடுத்துக்கொண்டு எதிர்ப்பாரா தருணத்தில் வந்து நிற்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் அவரும் ஏதோ காய்கறி வாங்க ரயில் பயணம் செய்து வருகிறார் என்பது போலவே தோன்றும். தொடர் பயணத்தில் எங்கோ யாரோ ஒருவர் வீட்டிற்கு உற்சாகமாகப் பயணம் செய்துகொண்டேயிருப்பார். வாழ்க்கையின் பொறுப்புகளின் பின்னல்களின் இணைந்துகொள்ளாமல் அவர் கட்டற்று இருந்தது பலருக்கு வருத்தம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்ததும் வீட்டில் நிலவும் இருக்கத்திலிருந்து வெளியேறி பெரும்பாலும் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று யானை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு எதிரே இருக்கும் மண்டபத்தில் அமர்ந்து யானையையே பார்த்துக்கொண்டிருப்பர்நான் அவ்வப்போது கோவிலுக்குச் சென்று அவரை சாப்பிட அழைக்கச் செல்லும்போது அவர் யானையைப் பற்றி நிறையச் சொல்லுவார். " அத பாரேன்அது வாலுதும்பிக்கைகாதுகால் ன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே அசையிது. அது தான் யானையோட ஸ்பெஷல்". என்று சொல்லி வாயில் "கிளிக்" என்பது போல ஓர் ஒலி எழுப்பி ரசித்தார். எனக்கு நெல் அரைக்கும் ஒரு பெரிய இயந்திரம் ஒன்றை முதல் முறை பார்த்தபோது தோன்றிய வியப்பிலிருந்த அளவில் சிறிதுகூட இல்லாமல் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பின்னர் ஒவ்வொரு முறையும் அங்குச் செல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக யானையைக் கவனிக்கத் தொடங்கி நானும் அவருடன் மணிக்கணக்கில் அங்கேயே அமர்ந்திருக்க ஆரம்பித்தேன்.

ஒரு முறை அவருடன் மண்டபத்தில் அமர்ந்து யானையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதுஎதிரிலிருந்த யானை வெகுவாக தன் உடலை அசைத்துக் கொண்டிருந்தது. படர்ந்த அதன் இரு காதுகள் ஒரே சீராக முன்னும் பின்னும் விசிறிக்கொண்டிருந்தன.

"காட்டுக்கு ராஜன்னா அது யானைதான்" என்று சொல்லி நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த பொடி டப்பாவிலிருந்து பொடி எடுத்து உதறிவிட்டு மூக்கில் இழுத்துக்கொண்டார். அவர் வெள்ளை வேஷ்டியில் பொடி சிதறிக்கிடந்தது. "அதுனாலதான் அது காது ரெண்டுபக்கமும் சாமரம் மாதிரி வீசுது"எனச் சொல்லிச் சிரித்தார்.

சிறிது நேரத்தில் அவரும் யானையைப் போலவே தன் உடலையும் அசைத்து அதன் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். எனக்கு அவரின் அசைவுகள் யானையின் உடல் மொழியை ஒத்து இருப்பதுபோலவே இருந்தது.

நான் அவரிடம் " நீங்களும் இந்த யானையைப் போலத் தான் பெரியப்பா" என்றேன். நான் சொன்னதைக் காதில் வாங்கினாலும் என்னிடம் எதுவும் சொல்லாமல் ஆடிக்கொண்டேயிருந்தார்.சிறிது நேரம் கழித்து மெல்ல மெல்ல அவர் ஆட்டம் குறைந்து யானையையே பார்த்துக்கொண்டிருந்த அவர், "ஆமாநானும் இந்த யானையைப் போலத்தான் ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன். இரண்டுபேருமே இருக்க வேண்டிய இடத்தில இல்லாம வேற எங்கேயோ இருக்கோம்"என்றார்.

வெகு நேரம் பேசாமல் அமைதியாக இருந்தார். இப்போது யானை வேகமாக எதிரில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அவரின் அமைதியைக் கலைக்கும் பொருட்டு, "யானைக்கெல்லாம் ஏன் மதம் புடிக்குது" என்றேன்.

அவர் என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே, "அது உடல் அளவில்தான் இங்க இருக்கு. ஆனால் அது நினைவெல்லாம் காட்டுக்குளத்தான் இருக்கும். என்னைக்காவது அது தன்னையோட நிலமையை உணரும்போது கோவம் வந்து திரும்பி போக செய்ற முயற்சிதான் அது . மனுசப்பய யானையை அடக்கி வச்சிருக்கான்னு சொல்றதெல்லாம் உண்மை இல்லை. அது சோத்துக்காக பழகிடுது. அவ்வளவுதான்."என்றார். அன்று வெகுநேரம் கழித்துத் தான் வீட்டுக்கு அவர் வந்தார்.

பின்னர் ரயில்வேத்துறை வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முன்பு போலப் பயணம் செய்ய இயலாமல் வீட்டிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது. காலம் கடந்தாலும் பெரியம்மா அவரை தான் கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்தார். ஒரு முறை அவரை பார்க்க வீட்டுக்குச் சென்றிருந்த பொழுதுவெளியே புறப்பட்டுக்கொண்டிருந்த அவர் என்னைக் கண்டதும் நின்று "கோமதி எப்படி இருக்கிறா?" என்றாள். எனக்குச் சட்டெனப் பிடிபடாமல் பின்பு சுதாரித்து, "ஓ! அதுக்கு மதம் புடிச்சி போச்சிபாகனை அடித்து போட்டுடுச்சி. அப்புறம் அதை எங்கயோ முகாமுக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க" என்றேன்.

அவர் சந்தோஷமாகி "அப்படித்தான் செய்யும். போக வேண்டிய நேரம் வந்துடுச்சி" என்று சொல்லிச் சிரித்தார்.

பெரியம்மா வெளியே வந்து," இன்னும் நீங்கப் போகலையா" என்று மிரட்டும் தொனியில் சொல்லஅவர் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எழுந்து விரைவாக வெளியே சென்றவர்வெளிக்கதவைச் சாத்தும்போது "கோமதிக்கு மதம் பிடிச்சிடுச்சி" என்று தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டார்.

 

 

 

 

 

பெரிய சோற்றுருண்டை தந்து

வெகு நாள் வளர்த்த

ஓங்கிய யானை

இறந்த பின்பு

அது நிறைந்து ஆடி நின்றிருந்த

காலியான கொட்டில் கண்டு

கண்ணீர் மல்கும் பாகனைப் போல

பெற்தேர் கிள்ளி இருந்த

உறையூர் மாமன்றத்தைக் கண்டு 

நானும் இதோ கலங்குகிறேன்.

Comments

Popular posts from this blog

கோபல்ல கிராமம் - ரசனையுரை

உணரும் தருணம்