கேட்குநர் உளர்கொல்?

 

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்

பொறையரு நோயொடு 

புலம்பலைக் கலங்கிப்

பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து

தூதை தூற்றுங் கூதிர் யாமத்து

தானுளம் புலம்புதொ றுளம்பும்

நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.

(வெண்கொற்றனார்குறுந்தொகை)

 

 

செவிலியர் ஆஞ்செலா இரத்தம் எடுப்பதற்குத் தேவையான ஊசியைத் தயார்ப்படுத்தும் இடைவெளியில்மார்ஷா தன் கையை இலகுவாக்கிக் கொண்டு,  கண் மூடி முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் காத்திருந்தாள். ஊசியின் கூர்மை அவள் தோளை ஊடுருவிச் செல்லும் அந்த கண நேரத்தில் வழக்கம்போல இன்றும்  மார்ஷாவுக்குஇராணுவச் சீருடை அணிந்துமுகமெங்கும் புன்னகை படர்ந்து இருக்கும் தன் மகள் சாரவின் புகைப்படம் நினைவுக்கு வந்து சென்றது. சாரா, மார்ஷாவின் ஒரே மகள். அமெரிக்க இராணுவத்தில் மருத்துவராக வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும்போது விபத்து ஒன்றில் ஒரு வருடத்திற்கு முன் இறந்துபோனாள். மார்ஷாவின் எண்ணங்கள் இரவும் பகலும் சாரவின் நினைவிலேயே இருந்தன.

 

ஆஞ்செலா இரத்தத்தைப் பல வண்ண குப்பிகளில் செலுத்தி மார்ஷா, 65” எனப் பெயரையும்வயதையும் எழுதி வேறு ஒரு சிறுப் பெட்டியில் வைத்தாள். அந்த பெட்டியில் மேலும் இரத்தம் நிறைந்த பல வண்ண குப்பிகள் இருந்தன. குப்பியில் அடைந்திருக்கும் இரத்தத்தைப் பார்க்க மார்ஷாவுக்கு ஏனோ எப்பொழுதும் பிடிப்பதில்லை. ஆஞ்செலா விடைபெற்றுச் சென்ற பிறகும்மார்ஷா சிறிது நேரம் கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இரவெல்லாம் தூங்காததால் கண்களில் அயர்ச்சி இருந்தது. பிறகு மெல்ல தன் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். அன்று சனிக்கிழமை என்பதால் அம்முதியோர் இல்லம் சுறுசுறுப்பாக இருந்தது. மார்ஷா சற்று எட்டி வராந்தாவைப் பார்த்தாள். நிறைய விருந்தினர்கள் வரவேற்பறையில் காத்திருந்தனர். அதில் அவளுக்குத் தெரிந்த முகம் என்று இன்றும் ஏதுமில்லை. பக்கத்து அறையின் கதவு திறந்திருக்க மெல்ல நடந்து சென்று உள்ளே பார்த்தாள். படுக்கை விரிப்புகள்மெத்தை என அனைத்தும் புதிதாக இருந்தன. போன மாதம் வரை நாடியா இந்த அறையிலிருந்தாள். அவள் தான் மார்ஷாவிடம் அவ்வப்போது பேசக்கூடியவள். இப்பொழுது அவளுமில்லை. மார்ஷா சிறிது நேரம் அந்த அறையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மெல்ல நடந்து அந்த முதியோர் இல்லத்தின் பின்புறம் சென்றாள்.

 

இலையுதிர் காலமென்பதால் காற்றில் குளுமை இருந்தது. அங்குச் சிலர் தனியாகவும்சிலர் விருந்தினர்களுடனும் அமர்ந்திருந்தனர். தூரத்தில் யாரோ ஒருவர் மார்ஷவை நோக்கிக் கையசைத்தது போல இருந்தது. மார்ஷா வழக்கமாக அவள் அமரும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகிலேயே அவள் சில நாட்களுக்கு முன்பு நட்டு வைத்த “மேப்பிள்” செடியைப் பார்த்தாள். மினுமினுக்கும் சிறிய இலைகளுடன் பொலிவாக இருந்தது. அவளுக்கு அது சிறிய நாய்க்குட்டியின் கனிவான பார்வை ஒன்றினை நினைவுபடுத்தியது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். அங்கிருந்து தூரத்தில் தெரியும் ஏரியைப் பார்த்துக்கொண்டு இருப்பது மார்ஷாவுக்கு விருப்பமானது. ஏரியைச் சுற்றி இருந்த மரங்களின் இலைகள் சிவப்புமஞ்சள் என நிறம் மாறிபனிப்புகையுடன் காடே தீப்பற்றி எரிவது போல இருந்தது. மார்ஷாவும்சாராவும் இலையுதிர் காலங்களில் தன் வீட்டில் இருக்கும் மரத்தின் அடியில் படுத்துக்கொண்டு சத்தமில்லாமல் விழும் இலைகளைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த காலங்கள் அவள் நினைவுக்கு வந்துசென்றது.

 

 

தீபா இன்றும் தூக்கத்திலிருந்து சட்டென விடுபட்டு முழித்துக் கொண்டாள். ராட்டினம் ஒன்றின் சுழற்சி சட்டென நின்றதுபோல இருந்தது அவளுக்கு. எழுந்து மெத்தையிலேயே அமர்ந்து பின்புறம் சாய்ந்து கொண்டாள். அறையில் இருள் வியாபித்திருக்ககடிகார முள் நகர்வின் ஓசை மட்டும் கேட்டது. ஒரு வாரக் காலமாகவே சரியான தூக்கமில்லாமல் நடு இரவில் எழுந்து கொள்வதால் வீட்டிலிருந்த மற்றொரு அறையில் அவள் தனியாகப் படுக்க ஆரம்பித்து அது இன்றும் தொடர்கிறது. சிறிது நேரத்தில் கண் இருளுக்குப் பழக்கமாகி அறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் அவளுக்குத் துலங்கி வந்தது. அவள் அம்மாவின் நினைவுகளிலிருந்து விடுபடஅந்த அறை முழுவதும் இருந்த அவள் அம்மாவுடனான புகைப்படங்களை ஜெகன் நீக்கியிருந்தான். ஆனால் நீக்கியதன் வெறுமை அவள் அம்மாவின் நினைவுகளை அவளுக்கு உருபெருக்கி கொண்டேயிருந்தது. தீபா ஒரே மகள். இந்தியாவில் அவளின் அம்மா தனியாகத்தான் வசித்தாள். ஒரே ஒரு முறை அமெரிக்காவிற்கு வந்து இவர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்திருக்கிறாள். பின்பு அவள் அப்பாவின் நினைவுகளுடன் இந்தியாவிலேயே இருப்பதாகச் சொல்லி அமெரிக்காவில் தொடர்ந்து இவர்களுடன் இருக்கச் சம்மதிக்கவில்லை. தீபாவுக்கு அவ்வப்போது இந்தியாவுக்குச் சென்று அம்மாவைப் பார்த்துவரவேண்டும் தோன்றும்.  ஆனால் அது நடக்கவேயில்லை. இங்கிருக்கும் வாழ்க்கை முறையும் தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த எண்ணங்களை மட்டுப்படுத்திவிட்டது. கையடக்க தொலைப்பேசியில் அம்மாவைப் பார்த்துப் பேசுவதே போதுமானதாகிவிட்டது. அந்த சிறிய செவ்வக வடிவ திரையினுள் அவள் சிரித்த முகத்துடன் பேசுவதுஅவள் நன்றாகத்தான் இருக்கிறாள் என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. அதைத்தாண்டிய அவள் உலகத்தைபிரச்சினைகளை நானும் கேட்கத் தவறிவிட்டேன்அவளும் சொல்லவில்லை என்று நினைத்துக்கொண்டாள். அம்மாவினை நினைக்கும்போதெல்லாம் தொலைப்பேசியின் திரையில் அடைந்திருந்த அந்த முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது. இப்படி அனைத்து உறவுகளும் இனி அந்த சிறிய திரையின் கட்டத்துக்குள்ளாகவே அடங்கிவிடும் போல என்று நினைத்துக்கொண்டாள். அம்மா இறந்து ஒரு வாரமாகியும் தீபாவின் மனம் அதனை இன்றும் உணராமல் ஏற்காமல் இருப்பதாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அவளுக்கு இன்றுவரை அழுகையே வரவில்லை. அந்த குற்றவுணர்ச்சி அவளை ஆழமான மனச்சோர்வுக்குத் தள்ளியது. அவளுக்கு அம்மாவின் நினைவுகள் பொங்கிய வண்ணமிருந்தன.

 

விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது. தீபா எழுந்து சமயலரைக்கு சென்றாள். இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் கணவரோ குழந்தைகளோ சீக்கிரமாக எழப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். அப்போதுதான் அவளுக்கு தன் மகள் அவள் சேவை செய்யும் முதியோர் இல்லத்துக்கு அவளுடன் வரவேண்டும் என்று அழைத்தது நினைவுக்கு வந்தது. அங்கு இருப்பவர்களுடன் உரையாடினாள் தீபாவின் மனச்சோர்வு சற்று சரியாகும் என்பதால் அவளையும் வரச்சொல்லியிருந்தாள்.  

 

தீபா அம்முதியோர் இல்லத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். அன்று சனிக்கிழமை என்பதால் நிறைய விருந்தினர்கள் வந்து காத்திருந்தனர். தீபாவின் மகள் வேறு ஒரு அறையில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். தீபாவுக்கு யாருடனும் அந்த மன நிலையில் பேச விருப்பமில்லை. இருந்தாலும் மகளின் விருப்பத்திற்காக ஒத்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து எழுந்து முதியோர் இல்லத்தின் பின்பக்கம் சென்றாள். இலையுதிர் காலம் என்பதால் காய்ந்த சருகுகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன. அங்குமிங்கும் ஒரு சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். துரத்தில் தெரியும் ஏரியைப் பார்த்தவுடன் சற்று தள்ளி இருந்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்துகொண்டாள். பனிப்புகை மெல்ல ஏரியின் மேற்பரப்பில் நழுவிக்கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி இருந்த மரங்களின் இலைகள் வண்ணம் மாறியிருந்தது. சட்டென அவளுக்கு அவளும் அவள் அம்மாவும் இதுபோல ஒரு இலையுதிர் காலத்தில் மரங்களின் ஊடே ஏதோ கதை பேசிக் கொண்டே நடந்து சென்றதும்அம்மா வண்ணம்  மாறி இருக்கும் இலைகளைப் பார்த்து வியந்துகொண்டிருந்ததும் நினைவுக்கு வந்த போதுஅருகிலிருந்து யாரோ அவளை மெல்ல அரவணைப்பது போலக் குளுமையான காற்று அவள் உடலைத் தழுவிச் சென்றது. அவள் உடல் சட்டெனச் சிலிர்த்துக்கொள்ளகிறீச்சிடும் ஒலியின் அழுகுரலுடன் தீபா சத்தமாக அழ ஆரம்பித்தாள். அவளின் அருகே அடி பெருத்து, மிக உயரமாக வளர்ந்திருந்த அந்த மேப்பிள் மரம் அவளின் மீது இலைகளைப் பொழிந்துகொண்டேயிருந்தது.  

 

 

மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில்

இரத்தம் உறிஞ்சும் நுளம்பின் கடிதாங்காது

தொழுவத்து எருமை தலை குழுக்கும்போது

எழும் கழுத்துமணியோசையை 

என்னைப் போல

அணையுடைத்த கண்ணீரால் சிவந்த விழிகளுடன்

தாளமுடியாத துயருடன்

புரண்டு புரண்டு படுத்தபடி

இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்

வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்?

Comments

Popular posts from this blog

கோபல்ல கிராமம் - ரசனையுரை

உணரும் தருணம்