வெறியுறு வனப்பு

சிறு வயதில் பள்ளி விடுமுறைகளின் போது திருச்சியிலிருந்த பெரியம்மாவின் வீட்டுக்குத்தான் பெரும்பாலும் செல்வோம். அதுதான் அப்போதைக்கு அப்பாவுக்கு அதிக செலவில்லாமல் இருந்தது, விடியற்காலையில் அவசரமாகப் படுக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட்டுக் குளித்து சோழன் ரயிலைப் பிடிக்க ரயில் நிலையத்திற்குள் நானும் என் அக்காவும் தள்ளிவிடப்படுவோம். அந்த நேரத்தில் ரயில் நிலையம் தூங்கி வழிந்துகொண்டிருக்கும். நிலையத்தை ஒட்டி வளர்ந்திருக்கும் ஆலமரங்களில் அடைந்திருக்கும் பறவைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். நானும் அக்காவும் அங்கிருக்கும் ஏதோ ஒரு மூட்டையின் மீது அமர்ந்து, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருப்போம். சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்க்கும் போது அங்கிருக்கும் ஆலமரங்கள் விலங்கு ஒன்று உயிர் பெற்றது போல பல்வேறு ஒலிகளுடன், பறவைகள் பறப்பதும் அமர்வதுமாகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அப்பா உறங்காமல் விழித்தே இருப்பார். அவருக்கு ரயிலில் பயணம் செய்வதென்பது மிகுந்த திட்டமிடலும் மெனக்கெடலும் கூடிய ஒரு சவாலான செயல். போய்ச் சேரும் வரை ஒரு பதைபதைப்புடன் இருப்பார்.
ரயில் வந்து, இருக்கையில் அமர்ந்த ஒரு சில நிமிடங்களில் அப்பா சன்னமான குறட்டையுடன் உறங்கிவிடுவார். நான் பின் செல்லும் மரங்களையும் வயல்களையும், ரயிலுடனே ஓடிவந்து சட்டென விலகியும் மீண்டும் கூடியும் வரும் மின்கம்பிகளையும் பார்த்துக்கொண்டிருப்பேன். விழித்துப்பார்க்கும் போது திருச்சி ஜங்சனை அடைந்திருப்போம். பெரியம்மாவின் வீடு ரயில் நிலையத்திற்குப் பின்புறம் இருந்த ரயில்வே காலணியிலிருந்தது. ரயில் நிலையத்தை ஒட்டி சற்று தூரம் நடந்து தண்டவாளங்களைக் குறுக்காகக் கடந்து செல்ல வேண்டும். மதிய வெயிலில் தண்டவாளங்கள் வெகு தூரம் வரை மினுமினுத்துக்கொண்டிருக்கும்.
சிறு கூழாங்கல்லும், முட்புதர்களும் கொடுக்காபள்ளி மரங்களும் இருபக்கமும் நிறைந்திருக்கும் இருக்கும் அந்த செம்மண் வழியாகத்தான் ரயில்வே காலணியை அடைய முடியும். காலணியில் ரயில் பெட்டிகளைப் போலவே ஒரே முகச்சாடையில் அனைத்து வீடுகளும் இருக்கும். பெரியம்மாவின் வீட்டின் வாசலில் இருக்கும் அந்த ஊசி இலை மரம் தான் அடையாளம் எங்களுக்கு. வீட்டை அடைவதற்குச் சிறிது தூரத்திலேயே, கல்யாணி அக்காளின் தையல் இயந்திரம் தட..தட சத்தம் எங்களுக்கு வந்தடையும். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் பெரியம்மா வீட்டுக்கென்றே இருக்கும் அந்த பிரத்தியேகமான வாசனை எங்களை உடனே விருந்தாளியாக்கிக்கொள்ளும்.
என் வயதொத்தவர்கள் யாரும் இல்லாததால் பெரும்பாலும் கல்யாணி அக்கா தான் என்னுடன் எதாவது பேசிக்கொண்டும் தைத்த துணிகளைக் கொடுக்க செல்லும் போதும், கடைக்குச்சென்று நூல் கண்டு வாங்கப் போகும் போதும் என்னையும் அழைத்துக் கொண்டு செல்வாள். நான் அவளுக்குச் சட்டை பொத்தான்களை பிரித்து கொடுப்பது, துணிகளை மடித்து வைப்பது என்று சில வேலைகள் செய்வேன். கல்யாணி அக்கா எப்பொழுதும் சிரித்த முகத்துடன், சடை பின்னி பூ வைத்துக்கொண்டு, எந்த நேரத்திலும் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் எடுப்பதற்குத் தயாராக இருப்பது போலவே இருப்பாள். அவள் என்றும் கோவமாகப் பேசியது போல நினைவில்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் அவள் ஏதோ ஒரு காரணத்தால் எதுவும் பேசாமல் தைத்துக்கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் தையல் இயந்திரம் மிக வேகமாக ஒவ்வொரு முறையும் சுழன்று நிற்கும். நான் அப்போதெல்லாம் அவளைத் தவிர்த்து பின்பக்கம் இருக்கும் மாதுளம் பழம் மரத்தின் அருகில் இருக்கும் மணலில் விளையாடச் சென்றுவிடுவேன். கல்யாணி அக்காவின் திருமணம் ஏதோ காரணங்களால் தள்ளிக்கொண்டே சென்றது. அதில் அவளுக்கு வருத்தமா என்று தெரியவில்லை.
அப்போதெல்லாம் பெரியம்மா ஒவ்வொரு மாதமும் படையல் போட்டு சாமி கும்பிடுவாள். அந்த நாள் ஆரம்பிக்கும்போதே மிகக் கணமானதாக இருக்கும். யாரும் அதிகமாக பேசிகொள்ளமாட்டர்கள். வீட்டுக்குள் மழை பெய்தது போல அனைத்தையும் கழுவி வைத்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அன்று என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து இருந்ததால் அனைவரும் அதில் கவனமாக மூழ்கியிருப்பார்கள். சுவர் முழுவதும் சாமி படங்கள் நிறைந்திருக்கும் அறைக்குள் பெரியம்மா மட்டும்தான் சென்று வருவாள். அவள் ஒவ்வொரு முறையும் சென்று வரும்போதும் அவளின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் அடைந்துகொண்டிருக்கும். மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகையில் மயங்கிய ஒரு கனவு உலகத்தில் அணைத்தும் தெளிவற்று இருக்கும். பெரியம்மா சத்தமாக சாமி பாட்டினை பாட ஆரம்பிக்கும் போது, அப்பொழுதின் கணம் பொங்கி விளிம்பை அடைந்திருக்கும். அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை அங்கிருந்த அனைவரும் அறிந்திருந்ததால் ஏதோ ஒரு தவிர்க முடியாத சூழ் நிலையின் உடல் மொழியுடன் நிற்பார்கள். சட்டென எங்கிருந்தோ ஒரு சன்னமான ஒரு அழுகுரல் உடைந்து வெளிவரும். அது மெல்ல மெல்ல உச்சத்துக்குச் சென்று கரிய இரவொன்றில் தனித்து வெறிபிடித்த ஓநாயின் ஊளைபோல சத்தத்தை எழுப்பிக் கொண்டு கலைந்த தலைமுடியும் விகாரமான முகம் கொண்டும் எங்கிருந்தோ வெளிவந்து பேய் அயர்ந்தவள் போலச் சன்னதம் கொண்டு ஆடுவாள் கல்யாணி அக்கா. அவளின் வெறி பிடித்த அந்த ஆட்டத்தைக் கண்டு ஒவ்வொரு முறையும் பயத்தில் நடுங்கி நிற்பேன்.
அனைத்தும் முடிந்து பிறகு வீடு மெல்ல இயல்பு நிலைக்கு வரும். பெரியம்மா மறு நாள் ரேசன் கடையில் கோதுமையோ அல்லது அரிசியோ வாங்குவதைப் பற்றி பெரியப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பாள். கல்யாணி அக்கா தையல் இயந்திரத்தில் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் ஊசியின் சிறு துளையினுள் சட்டெனக் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர்ப்பாள். ஊசியில் நூலைக் கோர்த்தவளும், வெறி கொண்டு ஆடியவளும் ஒன்றா என்று மிரண்டு நிற்பேன். என்னைப் பார்த்துப் புன்னகை விட்டு இயல்பாக சட்சடென துணிகளை வெவ்வேறு கோணத்தில் வெட்ட ஆரம்பிப்பாள். வெட்டி விழும் துண்டுகள் புரிந்துகொள்ள முடியாத ஒரு வடிவில் விழுந்துகொண்டேயிருக்கும்.
பின்பு ஒரு சில வருடங்கள் கழித்து கல்யாணி அக்காவைத் தான் விரும்புவதாகவும் தனக்கே திருமணம் செய்து தரச் சொல்லி ஒரு வரன் வர, பெரியம்மாவுக்கு மிகுந்த சந்தோசம். உடனே அக்காவுக்குத் திருமணம் நடந்தது.
பல வருடங்கள் கழித்து நான் கல்யாணி அக்காவின் கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம் கல்யாணி அக்காவை முதன் முதலில் எங்குச் சந்தித்தீர்கள் என்று விளையாட்டாகக் கேட்டேன். அவர் கல்யாணி அக்கா ஒரு முறை சன்னதம் வந்து கோவிலில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தபோது பார்த்துத் தான் திகைத்து நின்றதாகவும், அவள் கண்களிலிருந்த வெறியே அவளிடம் காதல் கொள்ளச் செய்ததாகவும் கூறினார். நான் அருகில் அமர்ந்திருந்த கல்யாணி அக்காவைப் பார்த்தேன். அவர்கள் இருவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டனர். உக்கிரமும் காதலுமான இரு ஆடிகள் ஒன்றை மற்றொன்று பிரதிபலிப்பது போல எனக்குத் தோன்றியது.
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

Comments

Popular posts from this blog

கோபல்ல கிராமம் - ரசனையுரை

உணரும் தருணம்