திரு.எஸ். ராமகிருஷ்ணனின் பயணக்கட்டுரைகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அது ஏற்படுத்திய தாக்கத்தில் நானும் எழுத முயன்று, அது எவ்வளவு சவாலான ஒன்று என்பதை உணர்ந்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன். மிக முக்கியமான தடையாக எனக்கு இருந்தது, பயணத்துக்குப் பின்பு, மன நிலையை முன்பிருந்த உணர்வு புள்ளிக்கு நகர்த்தி அதே வியப்பை, பேரானந்தத்தை, கொந்தளிப்பை மீட்டெடுப்பது. மனம் அந்த தருணத்தில் அனைத்தையும் அடைந்து வேறு நிலைக்கு மாறிவிட்டதுபோல ஒரு உணர்வு வந்து வெறுமையை அடைந்திருக்கும். இரவில் ஒரு பெருங்கனவில் திளைத்திருந்த மனம் காலை எழுந்தபின்பு அத்தனையும் மறந்துவிடும் தருணம் போல.   சிறுகதைக்கான ஒரு கரு/உணர்வு வந்தவுடன் பெரும்பாலும் அதனை மனதில் நிகழ்த்திப்பார்க்காமல் எழுதும்போது என்ன வருகிறதோ அதனை எழுத வேண்டும் என்று திரு.ஜெ ஒரு முறை சொல்லியிருந்தார். அது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு ஒரு மனப்பயிற்சி தேவைப்படுகிறது. 

நண்பர் பாலாஜியின் கரூர் டைரிஸ் கட்டுரைகள் படித்தேன். முதல் நான்கு பகுதிகள் நிறையக் குறிப்புகளுடன் நகர்ந்துகொண்டிருந்தன. தனியாக நீண்ட விமானப் பயணம் என்பது எப்போதாவது எனக்கு நிகழ்வது. ஒரு மச்சம் போல என் குடும்பம் என்னுடன் எப்போதும் ஒட்டியிருக்கும். பாலாஜிக்கு வருடம் ஒரு முறை நிகழ்கிறது என்பதைப் படித்தவுடன் ஒரு பெருமூச்சு வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில், பயணத்தில் ஒரு பெரும் கூட்டத்தின் இடையே கிடைக்கும் அந்த தனிமை அலாதியானது. அது நிலைகொள்ளாமல் இருக்கும். கிட்டத்தட்ட அங்கிருக்கும் பெரும்பாலானோர் அதே மன நிலையில் தான் இருப்பார்கள். பாலாஜி அதைத்தான் "காத்திருத்தலின் உஷ்ணம்" என்று அழகாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 

நவினை பற்றிய குறிப்புகள் சிறப்பாக இருந்தன. கவிதை எழுதுபவர்களுக்கு மனம் எப்போதும் விழித்தே இருக்கிறது. அவர்கள் தருணங்களைக் கவனித்து பெட்டகத்தில் சேமித்துக்கொண்டே இருக்கிறார்கள் போலும். ஒரு சில இடங்களில் பாலாஜி அதனை இக்குறிப்புகளினூடே அழகாக வெளிப்படுத்தியும் இருக்கிறார். உதாரணமாக நவின் அவரின் மனைவியின் செல்ல உரையாடல்களுக்கிடையே தனக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் ஆனதை நினைவுகூர்வது சட்டென நவீனும் பாலாஜியும் இடமாறுகிறார்கள், பாயாசம் கூடவா வெளியில் செய்துகொடுக்கிறார்கள் / வாங்குகிறார்கள் என்று அவர் சொல்லுமிடத்தில் ஏதோ ஒன்று தொலைந்துபோன உணர்வு வந்துபோகிறது.

ஆனந்த்குமார் பற்றிய குறிப்புகள் மற்றும் அவருடனான உரையாடல்கள் நன்றாக இருந்தது. கவிதைகள் ஒவ்வொருவரின் வாசிப்பிலும் வேறு ஒன்றைத் தொட்டுச் செல்கின்றன என்று படித்தபொழுது மனம் வேகமாகத் தலையாட்டி ஒப்புக்கொண்டது. 

கவிஞர் திரு.அபி அவர்களுடனான பகுதி, குறிப்புகள் என்ற தலைப்புக்குள் அடக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். அந்த பகுதி பாலாஜியின் அனுபவம் சார்ந்தது. அதை அங்கங்கே கவிதை வரிகளுடன் அவரின் அனுபவ கூச்செரியும் தருணத்தை எழுதியிருக்கிறார். இந்த பகுதி மிகச் சிறப்பாக இருக்கிறது. இதை மேலும் நீட்டித்து எழுத பாலாஜியால் முடியும். "புரண்டு படுக்க இடமின்றி ஒற்றையடிப் பாதை  சலிக்கிறது" என்ற வரி ஏதோ செய்துகொண்டே இருக்கிறது. "அடக்கமாய் மகிழ அவைகளுக்குத்தான் தெரியும்.." என்ற வரியில் திரு. அபி அவர்கள் ஒரு கவிஞனாக எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

நாம் எல்லோரும் ஒரு நகுல் சாமி அண்ணனைக் கடந்து வந்திருப்போம். நம் இளமையில் அந்த அண்ணன்கள் ஒரு இலக்காக இருப்பார்கள். ஆனால், காலம் சட்டென ஒரு புள்ளியில் வேகமெடுத்து நம்மைப் பயணிக்க வைத்திருக்கும். அந்த இலக்கு மட்டும் மைல் கல்லாக அங்கேயே இருக்கும். இந்த பகுதி ஒரு சிறுகதைக்கான வடிவத்தை இயற்கையாகவே கொண்டிருந்தது. 

வாழ்த்துக்கள் பாலாஜி.   


Comments

Popular posts from this blog

கோபல்ல கிராமம் - ரசனையுரை

உணரும் தருணம்