இலைகளை வெறுக்கும் மரங்கள்

-------------------------------

நேற்று இரவு முழுவதும் அடித்த காற்றில் எதிர்வீட்டிலிருந்த மார்ஷாவின் தோட்டத்தில் வைத்திருந்த காற்றாடி அங்குமிங்கும் திரும்பிச் சுழலும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. காலையில் விழித்தபொழுது சுழற்றி அடிக்கும் மிகப் பெரிய காற்றாடி ஒன்றின் பிடியிலிருந்து மீண்டுவந்த கனவின் உணர்வுமட்டுமிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்று பார்க்க நினைத்தாலும், போர்வையின் கதகதப்பிலிருந்து வெளிவர மனமில்லாமல் அப்படியே கிடந்தேன். ஆனால், எண்ணங்கள் அனைத்தும் வெளியே உலாவிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து வெளியே சென்று பார்த்தேன். சற்று குளிராக இருந்தது. வரிசையாக நின்றுகொண்டிருந்த மரங்களிலிருந்து தொடர்ச்சியாக இலைகள் விழும் இயக்கத்தைத் தவிர அனைத்தும் அக்குளிரில் உறைந்திருந்தன. சாலையெங்கும் நிரம்பியிருந்த சிவந்த இலைகள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு துண்டுகளென எங்கும் பரவியிருந்தன. சிறிது நேரம் அக்குளிரிலேயே நின்றிருந்தேன். இலையுதிர் காலம் தொடங்கியவுடன் மனதுக்குள் மெல்ல ஒரு சோகமும் வந்துவிடுகிறது. ஏனோ அதற்கு எந்த வித காரணமும் இருப்பதுமில்லை. ஒளிகளை விழுங்கும் கரிய இரவுகள் விரைந்து வந்துவிடும் அந்த நாட்களில் மனம் எதிர்க்குள்ளோ சிக்கிக்கொண்டதுபோலவே இருக்கும். இலைகளை இழந்து நிற்கும் மரங்கள் சோகங்களின் படிமமாகிவிடும் காலங்கள் அவை. அப்போதுதான் கவனித்தேன். மார்ஷாவின் வீட்டின் முகப்பில் இருக்கும் அந்த பெரிய மரம், முடிச்சு ஒன்றின் முனையை இழுத்துவிட்டதுபோல சட்டென அனைத்து இலைகளையும் அவிழ்த்துவிட்டு நின்றிருந்தது. அவள் வீட்டின் அனைத்து பக்கங்களிலும் இலைகள் குவிந்து கிடந்தன. இவற்றை எப்படி அள்ளப்போகிறாள் என்பதை நினைத்தபோது மலைப்பாக இருந்தது. நான் உள்ளே சென்று காபி போட்டுக்கொண்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தேன். அதற்குள் மார்ஷாவும் வெளியே வந்து காலால் இலைகளைத் தள்ளி ஓரிடத்தில் குவித்துக்கொண்டிருந்தாள். மார்ஷாவுக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். மார்க் இறந்த பிறகு வெகு காலமாகத் தனியாகத்தான் வசிக்கிறாள். நான் என்னிடமிருந்த இலைகளை ஓரிடத்தில் குவிக்க உதவும் புளோயரை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றேன். நான் வருவதைப் பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே, "அதை என்னால் தூக்க முடியாது", என்றாள். "நான் செய்யப் போகிறேன்", என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மார்ஷாவுக்கு அவ்வப்போது இந்த மாதிரியான உதவிகளை நானோ அல்லது என் மகளோ செய்வோம். மீண்டும் தன் காலால் அந்த இலைகளை தள்ளிக்கொண்டே இருந்தாள். நான் அவள் வீட்டின் முகப்பில் கிடந்த அனைத்தையும் குவித்து வேறு கூடையில் அள்ளி போட்டுவிட்டு அவளிடம் சென்றேன். அவள் அங்கிருந்த படியில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டே அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் கூடையிலிருந்த இலைகளின் குவியலைக் காண்பித்து, "பெரும் மரம் ஒன்று ஒரு கூடைக்குள் அடைபட்டுக் கிடக்கிறது" என்றேன். அவள் சிரித்துக்கொண்டே "இல்லை, இது தான் மரம்" என்று அந்த மரத்தைக் காண்பித்தாள். நான் நிமிர்ந்து அந்த மரத்தைப் பார்த்தேன். இலைகளற்று பெரும் கிளைகளும் சிறு கிளைகளுமாகச் சிக்கலான ஒரு அமைப்புடன் உயர்ந்திருந்தது. அவள் மீண்டும், "இது தான் உண்மையான மரம். இலைகளும், பூக்களும் மரத்தின் உணர்வின் வெளிப்பாடு மட்டுமே. அவைகள் போலியானவை. அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த மரம் போலத்தான் நானும் நிற்கின்றன. இந்த வயதை அடைந்த பின் என்னிடமிருந்த ஆசைகள், பொறுப்புகள், துக்கங்கள், வருத்தங்கள், பொறாமைகள் என அனைத்தும் உதிர்ந்துவிட்டன. இப்பொழுது நான் தனியாக நிற்கும் என்னைப் பார்க்கிறேன். இந்த பார்வை அனைத்தையும் இழந்து நிற்கும் பொழுது தான் வருகிறது. அது வேறு ஒரு தரிசனத்தைத் தருகிறது", என்றாள். அவள் சொல்வது சரியாக விளங்காமல் நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள், "உனக்கு என்றைக்காவது ஒரு நாள் குறிப்பிட்ட வயதுக்குப் பின், நான் தனியானவன் என்ற உணர்வு வரும். அந்த நொடியிலிருந்து வாழ்க்கை சுற்றி வைத்திருந்த நூற்கண்டு எதிர்த் திசையில் சுழன்று பிரிவது போல உன்னிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்துகொண்டே செல்லும். அப்போது வந்து இந்த மரத்தைப் பார். உனக்கு அப்போது புரியும்", என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
நான் கூடையில் வைத்திருந்த இலைகளை எடுத்துக்கொண்டு குப்பையில் கொட்டிவிட்டு அவள் சொன்னதையே நினைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சிறிது நேரம் கழித்து அப்பாவிடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன், அவர் வெகு நாட்களாக ஏதோ ஒரு வருத்தத்தில் பேசாமல் இருந்த அவர் நண்பர் திடீரென வீட்டிற்கு வந்து பேசி சென்றதை மகிழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் நம்பமுடியாமல், "என்ன திடீரென்று இந்த மாற்றம்?" எனக் கேட்டேன். அவர், "வயசாகிடுச்சி. இனிமே எல்லாத்தையும் ஒவ்வொண்ணா விடவேண்டியதுதான்", என்றார். நான் ஜன்னல் வழியாக அந்த மரத்தைப் பார்த்தேன். இலைகளற்ற அந்த மரம் இப்போது இன்னும் அதிகமான வெளிச்சத்தையும், அகண்ட அந்த நீல வானத்தையும் காட்டிக்கொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள்