The Old Man and the Sea - Ernest Hemingway




சமீபத்தில் என் குடும்பத்துடன் ப்ளோரிடா மாகாணத்தில் தென் மேற்கே இருக்கும் கீ வெஸ்ட் (Key West) என்ற பல தீவுகள் அடங்கிய இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம். அங்குச் செல்ல வேண்டிய முக்கியமான இடங்களை என் மனைவியிடம் பார்க்கச் சொல்லியிருந்தேன். நான் சொன்னது போலவே அவளும் ஆராய்ந்து ஒரு சில இடங்களைக் குறித்துக்கொண்டு என்னிடம் கொடுத்தாள். அதில் ஒரு இடம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது அமெரிக்காவின் தலை சிறந்த இலக்கிய எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) வாழ்ந்த வீடு கீ வெஸ்டில் இருந்தது. பார்த்தவுடன் மனதுக்குள் ஏனோ ஒரு குதூகலம் வந்து தொற்றிக்கொண்டது. நான் இதுபற்றி என் மகளிடம் சொல்ல அவளும் உற்சாகமானாள். இதுவரை அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் நானோ என் மகளோ படித்ததில்லை. ஆனால் தமிழின் சிறந்த இலக்கிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நகுலன் அவர்களின் உரையாடல் ஒன்றில் எர்னஸ்ட் ஹெமிங்வே புத்தகங்கள் பற்றிப் பேசியிருந்தது நினைவிருக்கிறது. அடுத்த நாளே என் மகள் என் வீட்டின் அருகில் இருக்கும் நூலகத்திலிருந்து எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய "The Old Man and the Sea" என்ற ஒரு நாவலை எடுத்து கொண்டுவந்தாள். அவர் வீட்டைப் பார்ப்பதற்குள் அந்த நாவலைப் படித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து உடனே ஆரம்பித்துவிட்டாள். கிட்டத்தட்ட கீ வெஸ்ட் சென்று அடையும் முன்பே படித்துவிட்டிருந்தாள். படித்து முடித்த நாள் முதல் அவள் எந்த இலக்கும் இல்லாமல் ஒரு அடர்ந்த காட்டினுள் அது தரும் ஏகாந்த அனுபவங்களில் சுற்றித் திரிவது போலவே எங்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தாள். நான் அங்கு இருந்த ஒரு தீவினில் என்னை நாற்புறமும் கடல் நீர் சூழ்ந்திருக்கப் படிக்க ஆரம்பித்தேன். 


கதை நாங்கள் தங்கியிருந்த கீ வெஸ்ட் தீவின் எதிரில் கிட்டத்தட்ட ஐம்பது மைல் தொலைவில் இருக்கும் கியூபா நாட்டின் ஹவானா தீவுக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. கதையில் வயது முதிர்ந்த மீனவனாக வரும் சாண்டியாகோ தொடர்ந்து எண்பத்துநான்கு நாட்கள் மீன் ஏதும் கிடைக்காமல் வெற்று மரக்கலத்துடன் திரும்ப அவரின் அதிர்ஷ்டம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. இதற்கு முன்பு பல முறை அவர் மிகப் பெரிய மீன்களைப் பிடித்ததால் உண்டான பல  காயங்களின் வடுக்கள் மறக்கப்பட்டு அவரின் அதிர்ஷ்டம் அவரை மற்றவர்களுக்கு கேலிப்பொருளாக்கியது. அவரின் ஒரே நண்பனான மனோலின் என்ற சிறுவனின் பெற்றோர்கள் நாற்பது நாட்களுக்குப் பின்பு அவர் அதிர்ஷ்டம் தன் பையனுக்கும் ஒட்டிக்கொள்ளப் போகிறது என்றெண்ணி அவனைத் தடுத்துவிட அவர் தனிமையில் மீன் பிடிக்கச் செல்கிறார். இந்த கதையில் அந்த பெரியவருக்கும் அந்த சிறுவனுக்கும் இருக்கும் இயல்பான உரையாடல்கள் வழியே அந்த பெரியவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை எழுப்பிவிடுகிறார். இரு இணைபிரியா தோழர்கள் போல அவர்களின் உரையாடல்கள் விளையாட்டைப் பற்றியும் தன் கனவு பற்றியும் மீன் பிடிப்பது பற்றியும் அமைந்திருந்தது சிறப்பாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்பு பெரியவர்கள் சட்டெனச் சிறுவனாகும் தருணத்தில் அவர் இருப்பதை அழகாகக் காட்டுகிறது. அச்சிறுவன் கொடுக்கும் நம்பிக்கையில் அப்பெரியவர் எண்பத்து ஐந்தாவது நாளில் மீண்டும் மீன் பிடிக்கச் செல்கிறார். கடலில் அவரின் மரக்கலத்தைத் தள்ளிச் செலுத்திய நாளிலிருந்து அப்பெரும் கடலின் சித்திரத்தை எழுத்துக்கள் வழியே கொண்டுவந்து அந்நாவலைப் படிக்கும் நாமும் கடலுக்குள் இருப்பது போல ஒரு பெரும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது இந்த நாவல். நான் ஒவ்வொருமுறையும் புத்தகத்திலிருந்து மீண்டு தலை தூக்கிப் பார்க்கும் போது என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல வண்ணங்களில் நிறைந்திருக்கும் கடல் நீர் எனக்குள் ஒரு பெரும் பரவசத்தைக் கொண்டுவந்தது. கதையில் அவர் சொல்லும் பல வகை  மீன்கள் பறவைகள் என ஒவ்வொன்றையும் நான் ஏதோ ஒரு இடத்தில் அங்குப் பார்க்க நேரிட்டபோது இவற்றில் ஏதோ ஒன்று கடலில் தனியாகப் பேசிக்கொண்டு இருந்த அந்த பெரியவரைப் பார்த்திருக்கக் கூடும் என்று தோன்றிய சமயம், எப்பொழுதோ எழுதிய ஒரு நாவல் என் நிகழ்காலத்தில் நிகழ்த்திப் பார்க்கவைத்திருக்கிறது என்பதை நினைத்தபொழுது பிரமிக்கவைத்தது. 


கடலுக்குள் போன முதல் நாளே பெரியவருக்கு மார்லின் என்ற அறிய வகை மீன் ஒன்று அகப்படுகிறது. அதற்குப் பின்பு அந்த மீனுக்கும் அவருக்குமான ஒரு நீண்ட போராட்டம் மூன்று நாட்களாக நடக்கிறது. இந்த மூன்று நாட்களும் அப்பெரியவரின் மன ஓட்டத்தை மிக இயல்பாக அழகாகப் பதிவுசெய்தது தான் இந்த புத்தகத்தின் மிகச் சிறப்பானதாக்குகிறது. எங்கும் நீரினால் மட்டுமே சூழ்ந்திருக்கும் ஒரு நிலப்பரப்பில் மூன்று நாட்கள்  நடக்கும் ஒரு சம்பவத்தைப் பல காட்சிகளும் தகவல்களும் மட்டுமே கொண்டு எந்த விதமான சலிப்பும் ஏற்படாமல் புனைந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது. பல இடங்களில் ஹெமிங்வேயின் உருவகங்கள் ஆழ்ந்து யோசித்து ரசிக்கவைக்கிறது. 


"They were as old as erosions in a fishless desert" 

"Fish's eye looked as detached as the mirrors in a periscope or as a saint in a procession."        

"The sail was patched with flour sacks furled looked like the flat of permanent defeat"


கடலை பெண்மையுடன் ஒப்பிட்டுப் பேசும் ஓரிடத்தில், "The moon affects her as it does a woman" என்ற வரியினுள் இருக்கும் நுட்பமான படிமத்தையும், ஒவ்வொரு முறையும் படிக்கும் போது அதனிலிருந்து பிடிபடாமல் நழுவி செல்லும் ஒரு கவிதைக்கான தருணத்தையும் ரசித்துக்கொண்டே இருக்க வைக்கிறது.


தொடர்ந்து போராடும் அந்த மீனின் மீது மரியாதையும், பசியுடன் இருக்கும் அதன் மீது இரக்கமும் கொண்டாலும் அதனைக் கொல்வதில் உறுதியாக இருக்கிறார். அந்த பெரியவருக்கும் அந்த மீனைக் கொன்றால் தான் அவரின் பெயரை மீட்டெடுக்க முடியும். அதனால் அவர் அதனைக் கொன்றே தீரவேண்டும். ஒன்றை மற்றொன்று கொல்வது இயற்கை. மனிதனின் மகத்துவத்தை அதுதான் நிலைநாட்டும். நல்லவேளையாக மனிதனுக்குக் கடலில் இருக்கும் மீனைக் கொல்வதால் அவன் மகத்துவம் காப்பாற்றப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நிலவையும், சூரியனையும், நட்சத்திரத்தையும் கொல்வதாக இருந்தால் என்னவாகும் என்று கவலைப்படுகிறார்.


"The punishment of the hook is nothing. The punishment of hunger, and that he is against something that he doesn’t comprehend, is everything." 


"It is good that we do not have to try to kill the sun or the moon or the stars. It is enough to live on the sea and kill our true brothers."


பெரும் கருணையும், பெருந்தன்மையும் கொண்ட இந்த மீனைச் சாப்பிடுவதற்கு மனிதர்களில் யாருக்கும் தகுதியில்லை என்றே எண்ணுகிறார். அவர் நினைத்ததுபோலவே இறுதியில் நடக்கிறது.     


கதையின் முடிவில் மீதமிருந்த அந்த பெரிய மீனின் அழகான வெள்ளை முதுகெலும்பு அப்பெரியவரின் திறமையையும், முயற்சியையும் இனிவரும் காலம் தோறும் மற்றவர்களுக்குச் சொல்லக்கூடிய கதை ஒன்றின் படிமமாக இருந்துவிடுகிறது. கூடவே அவரின் அதிர்ஷ்டத்தையும். 


Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

உணரும் தருணம்

நிலம் பூத்து மலர்ந்த நாள்