உணரும் தருணம்


என் அம்மா வழி தாத்தா அவரின் இளம் வயதில் மிகுந்த கூச்ச சுபாவத்துடனும், பயத்துடன் இருந்தார் என்றும், பாட்டியைத் திருமணம் செய்த பின் அவர் வேறு ஒரு ஆளாக மாறி பலபேருக்குப் பிடித்துப்போன ஒருவராகி வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்று செல்வந்தர் ஆனதைக் கதையாக என் மற்றொரு பாட்டி என் சிறுவயதில் சொல்லுவார். அதற்குக் காரணம் அவரை மணந்துகொண்ட பாட்டிதான் என்றும், "அவ கையில மந்திரம்ல வச்சிருந்தா" என்று சொல்லும்போது நான் உண்மையிலேயே என் பாட்டியை ஒரு மந்திரவாதியாகவே நினைத்து  அவளின் கை நீண்டு தாத்தாவின் கையை எப்போதும் பிடித்துக்கொண்டிருப்பது போலவே என் சிறுவயதில் கற்பனை செய்து வைத்திருந்தேன்.  பின்பு என் இளம்வயதில் அந்த கற்பனையை மீள் செய்யும் போது, அன்று பாட்டியை "மந்திரவாதி" என்று சொன்னது ஒரு வார்த்தை பதம் என்றும் அவள் "கையில்" என்ன இருக்கப்போகிறது என்று உணர்ந்து சிரித்திருக்கிறேன். மே மாதம் 17 ம் தேதி, டெக்ஸாஸ் மாகாணம் டல்லாஸில் திரு.ஜெயமோகன் அவர்களை முதன் முதலில் பார்த்து கை குலுக்கும் போது அந்த "மந்திரவாதி" தன்மையைச் சட்டென உணர்ந்தேன். தொடர் வாசிப்புகள் வழியே மட்டும் அறிந்த அந்த ஜெயமோகன் என் கையை எப்போதுமே இருக்க பற்றிக்கொண்டு தானிருக்கிறார் என்பதை உணர்ந்த தருணம் அது. அந்த "கை" என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு இலக்கிய புனைவுகளின் வழியே பலதரப்பட்ட அனுபவங்களைக் கைகொடுத்து வாழ்க்கையின் மகத்தான ஒரு பெரும் வெளியில் அழைத்து சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணரச் செய்தது. அன்று அவருடனான அந்த கை சீண்டல் என்பது இதனை உணரும் பொருட்டாகவே அமைந்தது என்றே எண்ணுகிறேன். 


திரு.ஜெயமோகன் ஒரு காணொளியில் அவர் திரு.ஜெயகாந்தனை நேரில் சென்று பார்த்ததை பற்றிக் கூறும்போது, 'ஜெயகாந்தன்' என்ற அந்த ஆளுமையின் உடல்மொழி கம்பீரமாக, தடித்த கண்ணாடியின் வழியே ஒளிவிடும் அந்த கண்களுடன், அவ்வப்போது மீசையை நீவிவிட்டுக்கொண்டும், தலை முடியைக் கோதிவிட்டுக்கொண்டும் இருப்பதாகச் சொல்லியிருப்பார். நான் திரு. ஜெயமோகனைக் காணொளியில் வழியாகவே பார்த்திருக்கிறேன். அதில் அவர் "பட.. பட" வென எரிந்து விண்ணெழும் வேள்வித்தீபோல இருப்பார். ஆனால் நேரில் திரு.ஜெயமோகன் அவர்களை முற்றிலும் வேறு ஆளாக மிக எளிதான ஒரு உடல்மொழியில், கண்களில் ஒரு சிரிப்பும் நட்பும் கொண்டு , வாஞ்சையாகத் தோளில் கைபோட்டுக்கொண்டு "நான் வேறல்ல" என்பது போல இருக்கிறார். அதே வேள்வித்தீ ஒரு அகல் விளக்கில் எரிந்துகொண்டிருப்பதுபோல. அப்படித்தானே இருக்க வேண்டும் ஞானம் என்பது. ஞானத்தின் உடல் மொழி கர்வமாக வெளிப்படுவதைத் தவிர்த்தல் என்பது மிகப்பெரிய சவால் அறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும். அதுவே அவர்களை இறுக்கமாகவும் மற்றவர்களுடன் தொடர்பற்றவர்களாகவும் மாற்றிவிடுகிறது என்பது என் எண்ணம். ஆனால் திரு.ஜெயமோகன் மிக எளிதாக அதனைக் கடந்துவிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.  அதனால் தான் அவர், "தான் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை" என்று சொல்லும்போது கர்வமற்ற அந்த ஞானத்தின் முன்பு நின்று அந்த உண்மையை எவராலும் மறுக்க முடிவதில்லை.  


பல கேள்விகள் அவர் தளத்தில் கேட்கப்பட்டவையாக இருந்தாலும், மழைபோல பாரபட்சமின்றி பொழிந்துதள்ளினார் அன்று. அதில் ஒரு கேள்வி திரு.ஜெயமோகன் அவர்களின் புனைவுகளில் வரும் பலதரப்பட்ட காட்சிகளைப் பற்றியது எனக்குள்ளும் இருந்தது. நுண்ணிய விவரணைகள் அடங்கிய ஒரு காட்சியைப் புனைவில் படிக்கும் போது மிகுந்த உணவெர்வெழுச்சியுடன் இருக்கும். ஆனால் அதனைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சி முன்னிருந்ததை விட மேலெழுந்து மனதில் வியாபித்திருக்கும். இப்படிப் பல காட்சிகளைக் கடந்து வரும்போது எவை மனதில் தங்குகிறது, எப்படி இதனைத் தக்க வைத்துக்கொள்வது என்ற ஐயம் எனக்குள் இருந்தது. இதனை நண்பர் திரு. பிரதீப் கேட்டபொழுது, ஜெவின் அழகான அந்த நீண்ட விளக்கத்தில் நான் உணர்ந்துகொண்டது காட்சிகளும் அதன் உள் விவரணைகளும் நம் ஆழ்மனதில் பதியக்கூடியவை. அவைகள் நீங்கள் எதிர்ப்பாரா தருணங்களில் வெளிவந்து உங்களை இணைக்கும். வலுக்கட்டாயமாகக் காட்சிகளைத் திணித்துக்கொள்ளமுடியாது. ஆதலால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆழ்ந்து அந்த காட்சிகளை உள்வாங்கிப் படிப்பது மட்டுமே. வெளியே வந்து அசைபோட்டுப் பார்த்ததில் சில தேய்ந்த கேள்விகளுக்குக்கூட அவரின் சிறப்பான பதில், அக்கேள்வியை முக்கியமானதாக மாற்றிவிட்டிருந்த விந்தையை உணரமுடிந்தது. தினமும் கேள்விகளையே எதிர்கொண்டு முன்னகர்ந்து செல்பவர் என்றே உணர்ந்தேன். 


திருமதி. அருண்மொழி நங்கை அவர்களுடன் அதிகமாகப் பேச இயலவில்லை என்பது ஒரு மனக்குறையே. அடுத்தமுறை அமெரிக்கப் பயணத்திலோ அல்லது முடிந்தால் இந்தியாவிலோ அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றே எண்ணுகிறேன். திரு.ராஜன் சோமசுந்தரம் அவர்களை நேரில் கண்டு பேசியது மிக மகிழ்ச்சியான தருணம். சிகாகோவில் வெண்முரசு திரையிடலில் அவரின் பாடலில் சிலிர்த்த அந்த தருணம் அவருடன் அன்று பேசியபோதும் இருந்தது. 


அன்று வந்திருந்தவர்களில் பலபேர் கைகளில் காடு புத்தகம் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. அந்த மாயக்காட்டிலிருந்து இன்னும் வெளிவராமல் இருக்கிறார்கள் போலும்.  அங்கு வந்தவர்களில் ஜெ-வின் தீவிர வாசகர்களை எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது. அவர்கள் என்னைப் போல முதல் தடவை இது போன்ற நிகழ்வில் கலந்துகொண்டு, கேட்க இயலாமல் போன பல கேள்விகளுடன் ஜெவையே பார்த்துவிட்டுத் தவறவிட்ட அந்த பொழுதை எண்ணி ஒரு மரத்தின் கீழ் அருகருகே நின்றுகொண்டிருந்தோம். ஜெ-வின் வாகனம் எங்களைக் கடந்து சென்றது. மரம் மெல்ல அசைந்து "சென்று வா" என்றது. 


 


Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள்

அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை