இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே

 மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அலறல் செய்திகளின் இடையே, தன் ஒரே மகள் இறந்த துக்கம் தாளாமல் அப்பெண்ணின் பெற்றோர்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தியைப் படித்தேன். வெறும் சொற்களால் மட்டும் கட்டமைக்கப்படாமல் அச்செய்தியுடன் இணைத்திருந்த அந்த புகைப்படத்தில், அப்பெண் இருபக்கமும் நின்றிருந்த தன் பெற்றோர்களின் தோளில் கை போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அச்செய்தியை முன் தள்ளி நகர்ந்திருந்தாலும், ஏனோ என் மனம் மட்டும் அங்கேயே நின்றிருந்தது. புகைப்படத்தில் அப்பெண்ணின் கண்களிலிருந்த துள்ளலான சிரிப்பும், அப்பெற்றோர்களின் பெருமிதமான தோரணையும் நினைவிலிருந்து மீள் செய்யும் தோறும் என் அலுவல் இயக்கங்கள் முழுவதும் இழுபட்டுக்கொண்டே இருந்தது. அப்புகைப்படம் அவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தை உறையச்செய்திருந்தது. அதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் அப்புகைப்படம் முக்கியமான ஒரு மைல்கல்லாக, எத்தனையோ நினைவுகளை அது தாங்கி நின்றிருக்கும். அப்பெண் இல்லா அவள் வீட்டில் அவளின் நினைவுகள் எங்கும் சிதறடிக்கப்பட்டு, சிறு பொருள்கள் கூட அவள் இல்லா இருப்பை உருப்பெருக்கி காட்டியிருக்கக்கூடும். ஒரு கதையில், தன் மகளின் நினைவாக அவள் அம்மா அப்பெண்ணின் கூந்தலிலிருந்து கொட்டிய மயிர்களைச் சேமித்துவைத்திருப்பாள். அப்பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டது கோழையான செயலா என்பது தெரியவில்லை. ஆனால் இழப்பின் துயரங்களிலிருந்து மீண்டு வருவதற்குக் கண்டிப்பாக ஒரு மிகத்திடமான மனம் வேண்டும் போல. மீள்வதற்கு வாழ்க்கையின் இயல்பைப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி. திரு.ஜெயமோகனின் "சங்கச்சித்திரங்கள்" புத்தகத்தில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு சங்க பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.
ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது.
மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது.
தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள்.
தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர்.
இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன்.
இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் இயல்பை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள்