சஞ்சாரம்

 என் சிறுவயது முதலே நாதஸ்வர இசையைக் கடந்து வந்திருக்கிறேன். இருந்தாலும் அந்த இசையின் இனிமையோ தாக்கமோ என் கடந்த கால நினைவின் எந்த பகுதியிலும் தங்கவே இல்லை. இத்தனைக்கும் மழைக்கு ஒதுங்கப் பள்ளிகளை விடக் கோவில்கள் நிறைந்த எங்களூரில் நாதஸ்வரம் வாசிக்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு அல்ல. எந்த கோவிலுக்குச் சென்றாலும் நாதஸ்வரமும், மேளமும் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மண்டபத்தின் இருள் அடர்ந்த ஒரு மூலையில் கருங்கல் தூண்களில் ஒலி அதிர வாசித்துகொண்டிருப்பார்கள். மீதமிருக்கும் விபூதியைக் கொட்டத் தூணைத் தேடும் தருணத்தில் மட்டுமே அவர்கள் கண்டுகொள்ளப்படுவார்கள். திருமண நிகழ்வின் போதும் கூட, கெட்டிமேளம் அடிக்கும் அந்த சில நொடிகள் மட்டும் அவர்களின் இருப்பு அனைவருக்கும் புலப்பட்டு முக்கியப்படுத்தப்படும். இசையறிவு அல்லது இசை ஞானம் என்பதைத் திரையிசை ஒன்றையே அளவுகோலாக வைத்து மதிப்பீடு செய்யும் பெரும்பாலானவர்களுக்கு, இசையின் வேறு ஒரு தளத்தில் இருப்பவர்களின் பெருமையே தெரிவதில்லை. இப்படி ஒரு பொதுப் புத்தியில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு திரு. எஸ்.ரா எழுதிய இந்த 'சஞ்சாரம்' புத்தகம் ஒரு நல்ல திறப்பு. இப்புத்தகம் கரிசல் நிலத்திலிருந்து வரும் ஒரு நாதஸ்வர இசைக் கலைஞன் தன் சிறுவயதிலிருந்து எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களின் ஊடாக, நாதஸ்வரத்தின் பரிதாபமான இன்றைய இடத்தை தொட்டுச் செல்கிறது. இதில் வரும் நாதஸ்வர கலைஞன் பக்கிரியை, நாம் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டும், ஜிகினா மின்ன ஆடும் கரகாட்டத்தில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டும், திருமணம் முடிந்து பேசிய தொகையின் மீதத்தை வாங்க வெளியே காத்துக்கொண்டும் இருக்கும் தருணங்களில் கடந்து வந்திருப்போம். ஆனால் அந்த பக்கிரிகளின் வாழ்க்கையை எழுத்தில் கொண்டு வந்து அன்று நாம் கடந்து வந்த புள்ளியில் நிற்க வைத்து அந்த பக்கிரியை நினைவுக்கூற வைக்கிறது இந்த புத்தகம். ஒரு இலக்கிய நாவல் வாசகனை அவன் சொந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் பிரித்து வேறு ஒருவரின் வாழ்க்கையில் வாழச்செய்து, இதுவரை அனுபவிக்காத ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்பதை என்னால் உணரமுடிந்தது.



Comments

Popular posts from this blog

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

உணரும் தருணம்

நிலம் பூத்து மலர்ந்த நாள்